உத்தரப் பிரதேச மாநிலம் கோரக்பூர் பல்கலைக்கழகத்தில் பயின்று வரும் சட்டக்கல்லூரி மாணவர் அருண் யாதவ் (24), பிரதமர் மோடி, உத்தரப் பிரதேச மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் ஆகியோரது முகங்களை மார்பிங் செய்து வீடியோ ஒன்றை தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவேற்றியுள்ளார்.
இதையறிந்த கோரக்பூர் பல்கலைக்கழகம் அருணை இடைநீக்கம் செய்ததுடன், இவ்விவகாரம் குறித்து ஆராய ஒரு குழுவையும் அமைத்துள்ளது. இதனிடையே, இரண்டு நாளுக்கு முன்னதாக காவல் துறையினருக்கும் இந்த பேஸ்புக் வீடியோ குறித்து தகவல் தெரிந்தது.
இதையடுத்து சௌரி சௌரா கிராமத்தில் இருந்த அருண் யாதவை காவல் துறையினர் கைது செய்தனர். பிரதமர் மற்றும் முதலமைச்சருக்கு எதிராக அவதூறு பரப்பும் நோக்கில் செயல்பட்ட சட்டக் கல்லூரி மாணவர் அருண் மீது இந்திய தண்டனைச் சட்டம் 153(a), 469 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:துணை சபாநாயகர் குறித்து அவதூறு பரப்பிய திமுக பிரமுகர் இருவர் கைது!