ஊடங்கு உத்தரவை மீறி நேற்று ஞாயிற்றுகிழமை (ஏப்ரல் 5ஆம் தேதி) கூட்டம் சேர்த்து தனது பிறந்தநாளைக் கொண்டாடியதாக மகாராஷ்டிரா மாநில பாஜக சட்டப்பேரவை உறுப்பினர் தாதாராவ் கீச்சே மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் குறித்து பேசிய சட்டப்பேரவை உறுப்பினர் கீச்சே, தனது பிறந்தநாளை கொண்டாடவோ, வாழ்த்துக் கூறவோ தனது வீட்டிற்கு யாரும் வர வேண்டாம் என்று தான் நான்கு நாட்களுக்கு முன்பே கூறியதாகவும், தன்னை பிடிக்காத சிலர், வேண்டுமென்றே தனது வீட்டில் ரேசன் பொருள்கள் கொடுப்பதாக வதந்திகளைப் பரப்பியுள்ளதாகவும் தெரிவித்தார்.
இதனை அறியாத மக்கள் தனது பிறந்தநாளன்று வீட்டின் முன்பு கூட்டமாகத் திரண்டுள்ளதாகவும், இது குறித்து விவரம் அறியாமல் காவல் துறையினர் தன்மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளனர் என்றும் கூறிய அவர், இதனால் தனது பெயருக்கு களங்கம் ஏற்பட்டுள்ளதாகவும் வருத்தம் தெரிவித்துள்ளார்.
மத்திய சுகாதார அமைச்சகத்தின் தகவல்படி, நேற்று வரை மகாராஷ்டிரா மாநிலத்தில் 748 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில், மும்பையில் மட்டும் நேற்று ஒரே நாளில் 433 பேர் பாதிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.