இலங்கையில் ஏப்ரல் 25ஆம் தேதி நடைபெறவிருந்த மக்களவைத் தேர்தல் கரோனா அச்சத்தால் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அந்நாட்டின் தேர்தல் ஆணையர் மகிந்த தேசப்பிரிய இதுகுறித்து பேசும்போது, கரோனா தொற்று பரவலைத் தடுக்கும்விதமாக தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகவும் தேர்தல் நடைபெறும் தேதி மார்ச் 25ஆம் தேதிக்குப் பின்னர் அறிவிக்கப்படும் எனவும் தெரிவித்தார்.
ஏப்ரல் 25ஆம் தேதி நடைபெறவிருந்த நாடாளுமன்றத் தேர்தலில் 16 மில்லியன் வாக்காளர்கள் வாக்களிக்கத் தகுதிபெற்றிருந்தனர். இந்தத் தேர்தலில் மகிந்த ராஜபக்ச கட்சிக்கு மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை நாடாளுமன்றத்தில் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு இலங்கையில், கோவிட்- 19 தொற்றால் பாதிக்கப்பட்ட முதல் நபர் கண்டறியப்பட்டார். தற்போது வரை 50 பேர் இந்த பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதும் 200-க்கும் மேற்பட்டோர் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதும் தெரியவருகிறது.
கோவிட்-19 தொற்று பரவாமல் இருக்க அந்நாடு வெளிநாட்டு விமானங்கள் மற்றும் வெளிநாட்டுப் பயணிகள் உள்ளே வருவதற்கு தடைவிதித்தது. மேற்கு கடற்கரைப் பகுதியில் கோவிட்-19 தொற்று அதிகம் பரவியிருக்கலாம் என்று கருதி அப்பகுதி மக்களை தனிமைப்படுத்திக்கொள்ள அரசு உத்தரவிட்டிருந்தது.
கரோனா பரவலைத் தடுக்கும்விதமாக கடந்த திங்கள்கிழமையிலிருந்து நான்கு நாள்கள் கூட்டங்கள் கூடுவதற்கு அந்நாட்டு அரசு தடைவிதித்திருந்தது. தற்போது அந்தத் தடையை அடுத்த வாரம் வரையில் நீட்டித்து உத்தரவிட்டிருக்கிறது.
இதையும் படிங்க: கொரோனா முன்னெச்செரிக்கை: மதுரையிலிருந்து இலங்கை செல்லும் விமானம் ரத்து