திருவனந்தபுரத்திலுள்ள ஐக்கிய அரபு அமீரக தூதரகத்திற்கு கடந்த ஜூலை 5ஆம் தேதி ரகசிய பார்சல் ஒன்று வந்தது. அந்தப் பார்சலை சோதனையிட்ட சுங்கத் துறை அலுவலர்கள், அதிலிருந்த 30 கிலோ கடத்தல் தங்கத்தைப் பறிமுதல்செய்தனர்.
இந்தக் கடத்தல் தொடர்பாக ஐக்கிய அமீரக தூதரகத்தில் பணிபுரிந்த முன்னாள் அலுவலர் சரித், ஸ்வப்னா சுரேஷ், சந்தீப் நாயர் உள்ளிட்டோரை தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ ) அலுவலர்கள் கைதுசெய்தனர்.
இந்தக் கடத்தலில் முக்கியக் குற்றவாளியாகக் கருதப்படும் ஸ்வப்னா சுரேஷ் தற்போது திரிசூர் மாவட்டத்தில் உள்ள வியூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், சிறையில் இருக்கும் ஸ்வப்னா சுரேஷ் தனக்கு நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளதாக நேற்று சிறை அலுவலர்களிடம் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து அவர் சிகிச்சைக்காக திருச்சூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு ஈ.சி.ஜி. சோதனை செய்யப்பட்டது. வழக்கமாக இருப்பதைவிட ஸ்வப்னாவின் ஈ.சி.ஜி. அறிக்கையில் ஒரு சிறிய மாறுபாடு காணப்பட்டாலும், அவரது நிலை சீராக உள்ளதாக மருத்துவமனை அலுவலர்கள் தெரிவித்தனர்.
கேரள தங்கக் கடத்தல் வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட மூன்று முக்கிய நபர்களான ஸ்வப்னா சுரேஷ், சரித், சந்தீப் நாயர் ஆகியோரின் நீதிமன்றக் காவலை செப்டம்பர் 9ஆம் தேதி வரை நீட்டித்து சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதையும் படிங்க: 'புதிய கல்விக்கொள்கையை செயல்படுத்த திட்டம் தயார்' - கல்வித் துறை அமைச்சர்