திருவனந்தபுரம்: கடந்த ஜூலை 05ஆம் தேதி கேரள மாநிலம் திருவனந்தபுர விமான நிலையத்தில் ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து முறைகேடாக தங்கம் கடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதில், கேரள தலைமைச் செயலக ஊழியர்கள்வரை தொடர்பிருப்பதாக சந்தேகித்து சுங்கத்துறை மற்றும் என்ஐஏ தொடர் விசாரணை மேற்கொண்டுள்ளது.
இந்த வழக்கில் தொடர்புடைய பலர் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டு விசாரணைக்கு உள்படுத்தப்பட்டு வருகின்றனர். வழக்கை விசாரிக்கும் அலுவலர்களுக்கு உதவும் வகையில், மத்திய அரசின் ஆயுதப்படைகள் கேரளாவிற்கு அனுப்பி வைக்கப்பட்டன.
இதற்கிடையில், கடந்த 30ஆம் தேதியுடன் மத்திய ஆயுதப்படையின் காலம் முடிவடைந்தது. இதையடுத்து, ஆயுதப்படையின் கால அவகாசத்தை நீட்டிக்குமாறு சுங்கத்துறை ஆணையர் மத்திய அரசிற்கு கடிதம் அனுப்பியிருந்தார்.
ஆனால், ஆயுதப்படைக்கு பதிலாக கொச்சி சுங்க அலுவலர்களுக்கு கேரள காவல் துறை தேவையான உதவிகளை செய்யும் என மத்திய அரசு, ஆணையரின் கோரிக்கைக்கு மறுப்பு தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: தங்கக் கடத்தல் வழக்கு: ஸ்வப்னா சுரேஷ், சரித் ஆகியோருக்கு டிச.8 வரை காவல்