கரோனா வைரஸ் தொற்றால் நாடு முழுவதும் லட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக, பெருந்தொற்று காரணமாக உயிரிழந்தவர்களின் முகத்தை பார்க்க கூட உறவினர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை.
இதற்கிடையே, கரோனா வைரஸ் நோயின் தாக்கம் குறைந்து வரும் நிலையில், பாதுகாப்பு விதிமுறைகளில் தளர்வு அறிவித்து கேரள அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. கரோனா காரணமாக உயிரிழந்தவர்களின் உடலை தகனம் செய்வதற்கு முன்பு, அவர்களின் முகத்தை பார்க்க நெருங்கிய உறவினர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து கேரள சுகாதாரத்துறை அமைச்சர் கே.கே. சைலஜா கூறுகையில், "எந்த காரணத்திற்காகவும் இறுதிச் சடங்கின்போது கூட்டம் அனுமதிக்கப்படாது. மதம் சார்ந்த சடங்கு நடத்தும் போது உடலை தொடாமல் அதனை மேற்கொள்ள வேண்டும். முகத்தைப் பார்க்க அனுமதி வழங்கப்பட்டவர்கள் கூட உடலை தொடக்கூடாது. 60 வயதிற்கு மேலானவர்களுக்கும் 10 வயதுக்கு கீழானவர்களுக்கும் அனுமதி மறுக்கப்படுகிறது.
இறுதிச் சடங்கின்போது சுகாதாரத்துறை விதித்த வழிகாட்டுதல்களை பின்பற்ற வேண்டும். இறுதிச் சடங்கில் கலந்து கொள்பவர்கள், தங்களைத் தாங்களே தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும்" என்றார்.