கரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மக்கள் அனைவரும் வீட்டிலேயே இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளனர்.
இந்நிலையில், உத்தரகாண்ட் மாநிலம், கேதார்நாத் கோயில் தலைமை அர்ச்சகர் பீமா சங்கர் உள்ளிட்ட ஆறு பேரும் மகாராஷ்டிராவில் உள்ள நந்தேடுக்கு சென்றனர். ஆனால், திரும்பி வருவதற்கு அனுமதி கிடைக்காததால், உயர் அலுவலர்களிடம் சிறப்பு அனுமதி கோரி உத்தரகாண்ட்டை வந்தடைந்தனர்.
கரோனா அச்சத்தால் வேறு மாநிலத்திலிருந்து வருபவர்களை 14 நாள்களுக்குத் தனிமைப்படுத்த வேண்டும் என்ற வழிமுறையைப் பின்பற்றி, அர்ச்சகர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். அவருடன் சென்றிருந்த மற்ற அர்ச்சகர்கள் 5 பேரும் வெவ்வேறு இடங்களில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து ருத்ரபிரயாக் மாவட்ட ஆட்சியர் மங்கேஷ் கில்டியால் கூறுகையில், "தனிமைப்படுத்தப்பட்டுள்ள காலம் முடிந்த பிறகு அர்ச்சகர் கோயிலுக்குச் செல்வதை அரசு தான் முடிவு செய்யும். அப்படியே பணிக்கு சென்றாலும், சில விதிமுறைகளுக்கு உட்பட்டுதான் பணியாற்றும் நிலை ஏற்படும். அர்ச்சகருக்கு தொடர்ந்து பரிசோதனைகள் நடத்தப்படும்" என்றார்.
இதையும் படிங்க: காட்டுப்பூவை சாப்பிடும் கூலித்தொழிலாளர் குடும்பம் - ஊரடங்கால் வாழ்வாதாரம் இழந்த அவலம்!