நாடு முழுவதும் நான்காவது ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், தங்கள் வாழ்வாதாரத்தை இழந்த புலம்பெயர் தொழிலாளர்கள், சிறப்பு ரயில்கள் மூலம் அவர்களின் சொந்த ஊர்களுக்கு அனுப்பப்பட்டு வருகின்றனர். அதன் ஒருபகுதியாக வரும் மே 30ஆம் தேதி வரை, ஷ்ராமிக் சிறப்பு ரயில்கள் விடப்பட்டுள்ளன.
ஷ்ராமிக் சிறப்பு ரயில்களின் கட்டணத் தொகையை மத்திய - மாநில அரசுகள் 85-15 விழுக்காடு வீதம் பிரித்துக்கொண்டு செலுத்தி வருகின்றன. சில மாநில அரசுகள் தொழிலாளர்களுக்கான கட்டணத்தைத் தர மறுப்பதால், அவர்களே தங்களின் பயணத்திற்குத் தேவையான கட்டணத்தைச் செலுத்தும் அவலம் ஏற்பட்டிருக்கிறது.
இந்நிலையில் புலம்பெயர் தொழிலாளர்கள், வெளிமாநிலத்தவர்கள் ஆகியோருக்கான சிறப்பு ரயில் கட்டணத் தொகையை வரும் மே 30ஆம் தேதி வரை ஏற்றுக் கொள்வதாக கர்நாடக முதலமைச்சர் பி.எஸ். எடியூரப்பா தெரிவித்துள்ளார்.