கேரள மாநிலம் கோழிக்கோடு கரிப்பூர் விமான நிலையத்திற்கு துபாயிலிருந்து 190 பயணிகளுடன் வந்த ஏர் இந்தியா விமானம், ஓடுபாதையில் தரையிறங்கும்போது தடுமாறி விபத்துக்குள்ளாகி இரண்டாகப் பிளந்தது. நேற்று (ஆகஸ்ட் 7) இரவு 7.41 மணியளவில் இந்த விபத்து நிகழ்ந்தது.
உடனே அவசரகால மீட்புக் குழுவினர் 100க்கும் மேற்பட்டோர், 24க்கும் மேற்பட்ட மீட்பு வாகனங்களுடன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர். இருப்பினும், அங்கு தொடர்ந்து கனமழை பெய்ததன் காரணமாக மீட்புப் பணிகளில் தாமதம் ஏற்பட்டது.
இதுகுறித்து இந்திய விமான போக்குவரத்து இயக்குநரகம், "கேரளாவில் பெய்துவரும் கனமழையால், விமானம் ஓடுபாதையில் தரையிறக்கும்போது சறுக்கி விபத்து நிகழ்ந்தது. இதுதொடர்பாக விசாரணை நடத்த மாநில அரசுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது" எனத் தெரிவித்துள்ளது.
இந்த விபத்தில் 19 பேர் உயிரிழந்தனர். படுகாயமடைந்தவர்கள் மலப்புரம் மற்றும் கோழிக்கோட்டிலுள்ள மருந்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இரவு முழுவதும் நடைபெற்றவந்த மீட்புப் பணிகள் தற்போது நிறைவடைந்துள்ளதாக முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
இந்த விமானத்தில் 10 குழந்தைகள் உள்பட 184 பயணிகள், விமான குழுவினர் ஆறு பேரும் பயணித்தனர் என்று தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க: கேரள விமான விபத்து: இந்திய விமானப் படையின் முன்னாள் தளபதி உள்பட 18 பேர் பலி!