குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிரான போராட்டத்தில் வன்முறை வெடித்தது குறித்து நடிகை கங்கனா, பேருந்துகள் ரயில்களை எரித்து நாட்டில் பதட்டமான சூழலை உருவாக்கும் அதிகாரத்தை உங்களுக்கு யார் கொடுத்தது. ஒரு பேருந்தின் விலை 80 லட்சம் ரூபாய் வரை இருக்கும், அது சிறிய தொகை அல்ல. நம் மக்களின் நிலை என்ன என்பதை கண்டிருக்கிறீர்களா? நம் நாட்டில் பசி மற்றும் ஊட்டச்சத்து குறைபாட்டால் மக்கள் மரணிக்கின்றனர். இதுபோன்ற சூழலில் வன்முறையில் ஈடுபடுவது சரியல்ல என தெரிவித்தார்.
மேலும் அவர், ஜனநாயகம் என்ற பெயரால் நாம் இன்னும் சுதந்திரத்துக்கு முந்தைய நிலையில்தான் இருக்கிறோம், நம் நாடு அடிமைத்தனமாக இருக்கிறது, நம்மை வற்புறுத்தியோ அல்லது துப்பாக்கி முனைகளிலோ மக்கள் காரியம் சாதித்து கொள்கின்றனர். போராட்டங்களில் ஈடுபடுவது, நாட்டை ஸ்தம்பிக்க செய்வது, வரி ஏய்ப்பு செய்வது போன்றவற்றில் ஈடுபடுவதை பெருமைகுரிய செயல்களாக கருதுகிறார்கள் . ஆனால் இன்றைய ஜனநாயகத்தில், உங்கள் தலைவர் உங்களில் ஒருவர். அவர் ஜப்பான் அல்லது சீனாவில் இருந்து வரவில்லை என்றார்.
பிரதமர் மோடிக்கு ஆதரவாக கங்கனா, நம் தலைவர் மிக எளிய இடத்திலிருந்து வந்தவர். அவர் கடின உழைப்பால் இந்த நிலையை அடைந்திருக்கிறார். அவர் செய்யும் நன்மைகளால்தான் நாம் முன்னேறியிருக்கிறோம். அவர் முன்னெடுக்கும் அத்தனையையும் தேர்தல் வாக்குறுதியில் குறிப்பிட்டிருந்தார், வெற்றிபெற்றதும் சொன்னதை செய்து வருகிறார், அதுதான் ஜனநாயகம் என்பது... இப்படி வன்முறையில் ஈடுபடுவது சரியல்ல என கூறினார்.
கங்கனா நடிப்பில் வெளியாகவுள்ள ‘பங்கா’ படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில்தான் அவர் இந்த கருத்தை தெரிவித்தார். அஸ்வினி அய்யர் திவாரி இயக்கியுள்ள ‘பங்கா’ படத்தில் கங்கனாவுடன் ரிச்சா சட்டா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். பெண்கள் கபடியை மையமாக வைத்து இத்திரைப்படம் உருவாகியுள்ளது.
இதையும் படிங்க: தலைவிக்காக கங்கனாவின் அர்ப்பணிப்பு!