ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்டுவந்த சிறப்புத் தகுதியை ஆகஸ்ட் 5ஆம் தேதி மத்திய அரசு நீக்கியது. 370ஆவது சட்டம் நீக்கப்பட்டதை எதிர்த்து தேசியத் தலைவர்கள், மாநிலத் தலைவர்கள் மத்திய அரசு மீது கடும் விமர்சனத்தை வைத்தனர். சிறப்புத் தகுதி நீக்கப்பட்டதையடுத்து ஜம்மு-காஷ்மீர் இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டன.
இதனையடுத்து, ஜம்மு-காஷ்மீரில் காங்கிரஸ் தேசிய மாநாட்டுக் கட்சி, மக்கள் ஜனநாயகக் கட்சி ஆகிய கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் உள்பட 400-க்கும் மேற்பட்டவர்கள் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டனர். காஷ்மீர் மக்களும் இதனை எதிர்த்து பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்திவந்தனர். மேலும், ஜம்மு காஷ்மீரில் பதற்றமான சூழல் நிலவிவரும் நிலையில், இணையதளம், தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டது. ராணுவம் குவிக்கப்பட்டு போராட்டம் செய்தவர்கள் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில், வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ள அரசியல் தலைவர்களை விடுவிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் ஏராளமான வழக்குகள் தொடுக்கப்பட்டன. இதனையடுத்து, ஜம்மு காஷ்மீர் மாநில ஆளுநரின் ஆலோசகர், ஃபரூக் கான் 'ஒவ்வொரு தனிப்பட்ட மனிதரின் நிலையை ஆய்வு செய்த பின்னரே அவர்கள் விடுதலை செய்யப்படுவார்கள்' என்று தெரிவித்தார்.
அதனடிப்படையில், தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள மூன்று அரசியல் தலைவர்கள் இன்று விடுதலை செய்யப்படுவது உறுதி செய்யப்பட்டுள்ளது. யாவர் மீர், நூர் அகமது, சோயப் லோன் ஆகியோர் விடுவிக்கப்படுகின்றனர். இதனால், அவர்களது வீட்டின் முன் நிறுத்தப்பட்டுள்ள படையினர் திரும்பப்பெற்றுள்ளனர்.
மேலும், ஜம்மு-காஷ்மீரின் முன்னாள் முதலமைச்சர்களான ஃபரூக் அப்துல்லா, மெகபூபா முஃப்தி, ஒமர் அப்துல்லா ஆகியோர் விடுவிக்கப்படாமல் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர். மேலும், ஃபரூக் அப்துல்லா மீது பொதுமக்கள் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டதால், விசாரணை இல்லாமல் இரண்டு ஆண்டுவரை வீட்டுக்காவலில் சிறை வைக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.