கேரள மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் கரோனா வைரஸ் பெருந்தொற்று தீவிரமாகப் பரவிவருகிறது. கோவிட்-19 பெருந்தொற்றைக் கண்டறிதல் சோதனையில் நேற்று மட்டும் 12 பேர் பாதிக்கப்பட்டிருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.
மாநிலம் முழுவதும் கணக்கிடும்போது மொத்தம் 40 பேர் தீவிரமாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். கேரளாவில் தற்போது 44 ஆயிரத்து 390 பேர் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 44 ஆயிரத்து 165 பேர் அவரவர் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.
தொற்றின் தாக்கம் வீரியமாகக் கொண்ட 225 பேர் பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தனிமைப்படுத்தப்பட்ட ஐந்தாயிரத்து 670 பேர் இயல்பான நிலைக்குத் திரும்ப அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நேற்று ஒரே நாளில் மாநிலத்தின் பல்வேறு மருத்துவமனைகளில் 56 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், நிலைமையைக் கட்டுப்படுத்த முடிவெடுத்த கேரள அரசு கடும் கட்டுப்பாடுகளை விதித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறது.
அதில், ”அனைத்து அரசு அலுவலகங்களும் ஒரு வாரத்திற்கு மூடப்படும். இரண்டு வாரங்களுக்கு வழிபாட்டுத் தலங்கள், கேளிக்கை விடுதிகள் மூடப்படும். காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே கடைகள் திறக்கப்பட வேண்டும். இந்தத் தடைகள் அரசு உத்தரவாக வழங்கப்படும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : 'மந்திரமே மருந்து' - கம்பியென்னும் கரோனா பாபா!