எல்லைப் பிரச்னை தொடர்பாக சீனாவுடன் நடந்து வரும் மோதலுக்கு மத்தியில், இந்திய அரசாங்கம் பாதுகாப்புப் படை வீரர்களுக்காக சமீபத்தில் அமெரிக்காவிடமிருந்து 72 ஆயிரம் துப்பாக்கிகளை வாங்கியது. இந்த துப்பாக்கிகள் வடக்கு மற்றும் பிற செயல்பாட்டுப் பகுதிகளில் உள்ள வீரர்களின் பயன்பாட்டிற்காக ராணுவத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஆயுதப்படைகளுக்கு வழங்கப்பட்ட நிதி அதிகாரங்களின் கீழ், மீண்டும் 72 ஆயிரம் சிக் 716 ரக துப்பாக்கிகளை வாங்க இந்தியா திட்டமிட்டுள்ளதாக பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.
ஃபாஸ்ட் டிராக் கொள்முதல் (fast-track procurement) திட்டத்தின் கீழ், இந்திய ராணுவம் இந்த துப்பாக்கிகளை வாங்கியது. புதிய இயந்திரத் துப்பாக்கிகள் தற்போது பயன்பாட்டில் உள்ள இன்சாஸ் 5.56 × 45 மி.மீ., துப்பாக்கிகளுக்கு மாற்றியமைக்க வாங்கப்பட்டுள்ளது.
திட்டத்தின் படி, சுமார் 1.5 லட்சம் இறக்குமதி செய்யப்பட்ட துப்பாக்கிகள் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளிலும், எல்லையில் காவல் பணியில் உள்ள வீரர்களுக்கும் வழங்கப்படவுள்ளதாகக் கூறப்படுகிறது.
சமீபத்தில், பாதுகாப்பு அமைச்சகம் இந்த துப்பாக்கிகளின் பற்றாக்குறையை நீக்க இஸ்ரேலில் இருந்து 16 ஆயிரம் லைட் மெஷின் துப்பாக்கிகள் (light machine guns) வாங்க உத்தரவு பிறப்பித்தது குறிப்பிடத்தக்கது.