இந்தியாவில் ஆண்டுதோறும் ஜனவரி 26ஆம் தேதி நாட்டின் குடியரசு தின விழா கோலாகலமாக டெல்லியில் நடைபெறுவது வழக்கம். ஆண்டுதோறும் குடியரசுத் தலைவர் மாளிகையிலிருந்து இந்தியா கேட் வரையிலான ராஜபாதையில், முப்படை அணிவகுப்பு, கலை நிகழ்ச்சிகள் நடக்கும்.
இந்த விழாவில் வெளிநாட்டின் முக்கியப் புள்ளிகள் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்பார்கள். அதன்படி கடந்த குடியரசு தின விழாவில், தென் ஆப்ரிக்க அதிபர் சிரில் ரமபோசா சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார்.
இந்நிலையில் அடுத்தாண்டு நடைபெறவுள்ள குடியரசு தின கொண்டாட்டத்தில் கலந்துகொள்ள பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு இந்தியா சார்பில் அழைப்புவிடுக்கப்பட்டுள்ளது. கடந்த நவம்பர் 27ஆம் தேதி இரு நாட்டு பிரதிநிதிகளுக்கு இடையே தொலைபேசி வாயிலாக நடைபெற்ற உரையாடலின்போது இந்த அழைப்புவிடுக்கப்பட்டது.
முன்னதாக, அடுத்தாண்டு பிரிட்டனில் நடைபெறவுள்ள ஜி-7 மாநாட்டில் இந்திய பிரதமர் மோடிக்கு பிரிட்டன் அழைப்புவிடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து இந்தாண்டு ஜனவரி 31ஆம் தேதியே பிரிட்டன் வெளியேறிவிட்டது. இருப்பினும், இப்போது பிரிட்டன் transition period எனப்படும் வெளியேறும் காலகட்டத்தில் உள்ளது. அடுத்தாண்டு ஜனவரி 1ஆம் தேதிக்குள் பிரிட்டன் புதிய வர்த்தகக் கொள்கையை அறிமுகப்படுத்த வேண்டும்.
இப்படியொரு இக்கட்டான காலகட்டத்தில் தற்போது பிரிட்டன் இருப்பதால் போரிஸ் ஜான்சன் குடியரசு தின விழா கொண்டாட்டத்தில் கலந்துகொள்வது குறித்து இப்போது உறுதியாகக் கூற முடியாது என்று இந்தியாவுக்கான பிரிட்டன் தூதர் ஜான் தாம்சன் தெரிவித்துள்ளார். இருப்பினும், இந்தியாவுக்கு வருவதில் போரிஸ் ஜான்சன் ஆர்வமாகவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: கரோனா தடுப்பு மருந்து: 'வயதானவர்களுக்கே முன்னுரிமை'