நாட்டில் கரோனா வைரஸ் பாதிப்பு தினம்தோறும் அதிகரித்த வண்ணம் உள்ளது. வைரஸ் தடுப்பு பணியில் மத்திய, மாநில அரசுகள் தீவிரமாக களமிறங்கியுள்ளன.
இந்நிலையில், டெல்லியில் நேற்று (ஜூலை 24) செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன், "இந்தியாவில் தற்போது வரை 12 லட்சம் பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 30 ஆயிரம் பேர் உயிரிழந்தனர். இதுகுறித்து கணக்கிடுகையில் இந்தியாவில் ஒரு மில்லியன் மக்கள் தொகைக்கு 864 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 11 பேர் உயிரிழந்தனர். இதனால், உலகிலேயே இந்தியாவில் தான் கரோனா பாதிப்புகள், உயிரிழப்பு எண்ணிக்கை குறைவாக உள்ளது.
தற்போது வரை, ஒரு கோடியே 5 லட்சம் பேரின் மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. தற்போது தினம்தோறும் 3 லட்சம் மாதிரிகள் பரிசோதிக்கப்படுகின்றன. இதுவரை நாட்டில் தொற்றிலிருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 63.45 விழுக்காடாகவும், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 2.3 விழுக்காடாகவும் உள்ளது. வைரஸ் தடுப்பு பணியில் மத்திய அரசின் ஆரோக்கிய சேது செயலி முக்கிய பங்கு வகித்தது.
மேலும், வைரஸ் பாதித்தவர்களுடன் தொடர்பிலிருந்தவரை எளிதாக கண்டறியும் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும் உதவியாக இருந்தது. கரோனா பாதிப்பு தொடங்கிய காலத்தில் இந்தியாவில் பிபிஇ கிட் உபகரணங்கள் உற்பத்தி செய்வது கிடையாது. ஆனால், தற்போது வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் அளவிற்கு வளர்ச்சி அடைந்துள்ளோம்" எனத் தெரிவித்தார்.