கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய, சீன ராணுவம் மோதிக்கொண்டதில் இந்திய ராணுவத்தை சேர்ந்த 20 வீரர்கள் கொல்லப்பட்டனர். இதனைத் தொடர்ந்து இரு நாடுகளுக்கிடையே பதற்றமான சூழல் நிலவிவருகிறது. இதனிடையே, இரு நாட்டு உயர்மட்ட ராணுவ அலுவலர்கள் இன்று சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
15 மணி நேரம் நடைபெற்ற பேச்சுவார்த்தையின்போது, கிழக்கு லடாக் பகுதியில் மோதலுக்கு முன்பான நிலையை மீட்டு கொண்டு வர வேண்டும். எல்லை பகுதியில் அமைதியை நிலைநாட்ட ஒத்துக்கொண்ட அனைத்து நெறிமுறைகளையும் பின்பற்றி நடக்க வேண்டும் என சீனாவுக்கு இந்தியா வலியுறுத்தியுள்ளது.
ஜூலை 15 ஆம் தேதி (புதன்கிழமை) அதிகாலை இரண்டு மணிக்கு நிறைவடைந்த பேச்சுவார்த்தையில், எல்லைப் பகுதி வரையறுக்கப்பட்டு பாதுகாப்பற்ற பகுதி குறித்து இந்திய பிரதிநிதிகள் சீனாவிடம் விளக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இரண்டாம் கட்டமாக, ராணுவத்தைத் திரும்பபெறும் நடவடிக்கையை அமல்படுத்துவது குறித்த வழிகாட்டுதல்களுக்கு இரு தரப்பும் ஒப்புக் கொண்டுள்ளதாகவும் மேற்கொண்ட ஒப்பந்தம் குறித்து உயர் மட்ட அலுவலர்களிடையே தெரிவித்த பிறகு அடுத்த கட்ட பேசு்சுவார்த்தை தொடங்கும் எனக் கூறப்படுகிறது.
துணை தளபதிகளுக்கிடையேயான நான்காம் கட்ட பேச்சுவார்த்தை ஜூலை 14ஆம் தேதி காலை 11 மணிக்கு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இப்பேச்சுவார்த்தையில் எட்டப்பட்ட முடிவுகள் குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை. இந்திய தரப்பில் துணை தளபதி ஹரிந்தர் சிங்கும் சீன தரப்பில் லியு லின்னும் இந்த பேச்சுவார்த்தையில் கலந்துகொண்டனர்.
இதனைத் தொடர்ந்து, பேச்சுவார்த்தையில் கலந்து கொண்ட உயர் மட்ட ராணுவ அலுவலர்களுடன் ராணுவ தலைமை தளபதி நரவானே ஆலோசனை நடத்தினார். இதேபோல், ஜூன் 30ஆம் தேதி நடைபெற்ற பேச்சுவாரத்தை 12 மணி நேரங்களுக்கு நீடித்தது.
இதையும் படிங்க: 'கிழித்தெறியப்பட்ட இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை' - ராகுல் காந்தி குற்றச்சாட்டு