உலகை உலுக்கும் கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு மே மூன்றாம் தேதி முடிவடைய உள்ள நிலையில், தளர்வுகள், நீட்டிப்பு, தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அனைத்து மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி இன்று காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்துகிறார்.
முன்னதாக, ஏப்ரல் 11ஆம் தேதி நடந்த முதலமைச்சர்கள் ஆலோசனையில் 21 நாள்கள் நாடு தழுவிய ஊரடங்கு உத்தரவை ஆதரித்த மாநிலங்களுக்கு மோடி நன்றி தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் இன்று நடக்கும் ஆலோசனைக் கூட்டத்தில் கரோனா தடுப்பின் தற்போதைய நிலை, அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் தகவலின்படி, இந்தியாவில் ஏப்ரல் 26ஆம் தேதி வரை 26,917 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 5,914 குணமடைந்துள்ளனர். உயிரிழப்புகள் 826 எட்டி உள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: மாநில அரசுகள் சிறப்பாக செயல்பட்டன - பிரதமர் மோடி