ஜீ20 மாநாடு வரும் 28, 29 ஆகிய தேதிகளில் ஜப்பானிலுள்ள ஒசகா நகரில் நடைபெறவுள்ளது. இதில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி இன்று ஜப்பான் சென்றார். அங்கு, ஜப்பான் வாழ் இந்தியர்களை சந்தித்து பிரதமர் மோடி உரையாற்றியபோது ஜெய் ஸ்ரீராம், வந்தே மாதரம் என கோஷம் எழுப்பப்பட்டது. அப்போது அவர் கூறுகையில், " ஏழு மாதத்திற்கு முன்பு நான் இங்கு வந்தபோது ஜப்பானில் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு மக்கள் ஷின்சோ அபே மீது நம்பிக்கை வைத்தது தெரிய வந்தது. இந்த முறை உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாட்டின் தேர்தலில் வெற்றிபெற்று நான் பிரதான சேவகன் ஆகியுள்ளேன்.
130 கோடி இந்தியர்கள் மேலும் வலிமையான ஆட்சியின் மேல் நம்பிக்கை வைத்து வாக்களித்துள்ளனர். 30 ஆண்டுகால இந்திய தேர்தல் அரசியலில் இது மிகப் பெரிய வெற்றி. அனைவருக்குமான வளர்ச்சி தான் எங்களின் மந்திரம். இது இந்தியாவை மேலும் வலுப்படுத்தும். உலக நாடுகளில் ஜப்பான் இந்தியாவுக்கு முக்கிய நாடாகும். இந்தியா - ஜப்பான் நாடுகளுக்கு இடையேயான உறவு நூற்றாண்டு பழமையானது.
விவேகானந்தர், ரவிந்திரநாத் தாகூர், மகாத்மா காந்தி, சுபாஷ் சந்திர போஷ் ஆகியோர் இந்தியா-ஜப்பான் உறவுகளை மேம்படுத்தியதில் முக்கிய பங்காற்றினர். எனவே தான் இரண்டாம் உலக போருக்கு பிறகும் கூட இரு நாடுகளுக்கு இடையேயான உறவு வலுவானது" என்றார்