புதுச்சேரி அரசு சார்பில் ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தின விழா ஆகஸ்ட் 15ஆம் தேதி அன்று உப்பளம் பகுதி உள்ள இந்திரா காந்தி விளையாட்டு மைதானத்தில் தேசிய கொடி ஏற்றி வைத்து காவல்துறையினர் அணிவகுப்பை முதலமைச்சர் ஏற்பார். விழாவில் அமைச்சர்கள், எம்பிக்கள், எம்எல்ஏக்கள் உயர் அலுவலர்கள், பொதுமக்கள் திரளாக பங்கேற்பர். தற்போது கரோனா காரணமாக சுதந்திர தின விழாவை தகுந்த இடைவெளியை கடைபிடித்துக் கொண்டாட மத்திய அரசு அறிவித்துள்ளது.
இதையடுத்து, இந்த ஆண்டு புதுச்சேரியில் சுதந்திர தின விழா ஆகஸ்ட் 15ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளது. உப்பளம் விளையாட்டு மைதானத்தில் அரசு சார்பில் பந்தல் அமைக்கும் பணிகள் இன்று (ஆகஸ்டு 6) தொடங்கின. எத்தனை பேரை விழாவில் பங்கேற்க அனுமதிப்பது குறித்தும், நோய்த் தொற்று ஏற்படாத வண்ணம் விழா நடத்துவது குறித்தும் அரசு ஆலோசனை நடத்தி வருகிறது.