டெல்லி: நாட்டில் இயங்கும் சீன நிறுவனங்களும் அவர்களது இந்திய கூட்டாளிகளும் ஷெல் நிறுவனங்கள் மூலம் பணமோசடி மற்றும் ஹவாலா பரிவர்த்தனைகளில் ஈடுபடுவதாக தகவல்கள் வெளியாகின.
இந்தத் தகவல்களின் அடிப்படையில் சீன நிறுவனத்தின் நெருங்கிய கூட்டாளிகள் மற்றும் இரண்டு வங்கி ஊழியர்களிடம் வருமான வரித்துறை அலுவலர்கள் சோதனை நடத்தியதாக மத்திய நேரடி வரி வாரியத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அப்போது, சீன தனிநபர்களின் உத்தரவின் பேரில் பல்வேறு போலி (ஷெல்) நிறுவனங்களில் 40-க்கும் மேற்பட்ட வங்கிக் கணக்குகள் உருவாக்கப்பட்டுள்ளதும், ஒரு கட்டத்தில் ஆயிரம் கோடி வரை பணப்பரிவர்த்தனை நடந்துள்ளதும் தெரியவந்துள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணையில், சீன நிறுவனம் ஒன்று மற்றும் அதன் கூட்டாளிகளின் துணை நிறுவனத்தால் நாட்டில் பல்வேறு இடங்களில் ஷோரூம்களைத் திறக்க, மானியம் பெறும் நோக்கத்துடன் ரூ.100 கோடி போலியாக முன்பணம் கொடுத்ததும் தெரியவந்துள்ளது.
இந்த வழக்கில், ஹாங்காங் மற்றும் அமெரிக்க டாலர்கள் சம்பந்தப்பட்ட வெளிநாட்டு ஹவாலா பரிவர்த்தனைகளின் ஆதாரங்களையும் அலுவலர்கள் கண்டறிந்தனர்.
சீன, இந்திய வீரர்கள் இடையே நடந்த கல்வான் பள்ளத்தாக்கு மோதலில் இந்திய வீரர்கள் 20 பேர் கொல்லப்பட்டனர். இதையடுத்து, சீன நிறுவனங்கள் மற்றும் முதலீட்டாளர்களுக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடியின் அரசாங்கம் பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
கடந்த மாதம் டிக் டாக், ஷேர் இட், ஹலோ உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட செயலிகளுக்கு இந்தியாவில் தடை விதிக்கப்பட்டது. இருப்பினும், சீன நிறுவனங்கள் பணமோசடி மற்றும் ஹவாலா பரிவர்த்தனைகளில் ஈடுபட்டிருப்பது இதுவே முதல் நிகழ்வு.
இதையும் படிங்க: ஜம்மு-காஷ்மீர், லடாக்கில் சீன ஊடுருவலின் தாக்கம்!