பிகார் மாநிலத்தின் ஜே.டி.யூ தலைமையிலான அரசின் பதவிக்காலம் நவம்பர் 29ஆம் தேதியுடன் முடிவடைகிறது. கரோனா அச்சுறுத்தல் மத்தியிலும் அம்மாநிலத்தில் உள்ள 243 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான தேர்தல் அக்டோபர், நவம்பர் ஆகிய இரண்டு மாதங்களில் மூன்று கட்டங்களாக நடைபெற்றவுள்ளது.
இந்த முறை நடைபெறவுள்ள பிகார் சட்டப்பேரவைத் தேர்தல் நான்கு முனை போட்டியை காணவுள்ளது. முன்னாள் முதலமைச்சர் லாலு பிரசாத் யாதவின் ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சி தலைமையிலான மகா கூட்டணி, முதலமைச்சர் நிதிஷ் குமார் தலைமையிலான ஜே.டி.யூ - என்.டி.ஏ கூட்டணி, பகுஜன் சமாஜ் கட்சி தலைமையிலான கூட்டணி, லோக் ஜனசக்தி கட்சி என நான்கு முனை போட்டி நடைபெறவுள்ளது.
மத்தியில் ஆளும் கட்சியான பாஜக தலைமையிலான என்.டி.ஏ கூட்டணியில் இருந்தாலும் பிகாரில் எல்.ஜே.கே தனித்து களம் காண்கிறது. அண்மையில் மறைந்த மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வானின் மகன் சிராக் பாஸ்வான் தலைமையில் லோக் ஜனசக்தி முதல்முறையாக தேர்தலை எதிர்க்கொள்கிறது.
சிராக் பாஸ்வானின் தேர்தல் பரப்புரை கூட்டங்கள் அவரது கட்சித் தொண்டர்களையும், கணிசமான அளவு பொதுமக்களையும் ஈர்த்துள்ளதாக அறிய முடிகிறது. நேற்றிரவு (அக்டோபர் 21) கயாவில் உள்ள அட்ரி சட்டப்பேரவைத் தொகுதியில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்ட அவர், தனது உருக்கமான பேச்சால் பலரையும் கண்கலங்க வைத்துள்ளார்.
கூட்டத்தில் பேசிய அவர், "எனது தந்தை இல்லாமல் களம் காணும் முதல் தேர்தல் இது. நான் தனியாக இருப்பதாகவே உணர்கிறேன். ஆனால், உங்கள் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப வாழ என்னால் முடிந்தவரை முயற்சிப்பேன். இப்படி ஒரு தலைவன் எந்த இயக்கத்துக்கும் வாய்த்தது இல்லை என்று நாம் பெருமையால் திளைக்கும் அளவுக்கு வாழ்ந்தவர். இப்படிப்பட்ட தொண்டர்கள் எந்த தலைவருக்கும் கிடைத்தது இல்லை என்கிற அளவுக்கு செயல்பட்டவர்கள் நீங்கள்.
தலைவர் - தொண்டர்கள் என்ற பாகுபாடுகூட இல்லாமல் உங்கள் அனைவரையும் அன்பால் அரவணைத்த அவர் நம்மிடையே இல்லாமல் போயிருக்கலாம். அவரது லட்சியமும், கனவும் நம்மை வழிநடத்தும். லோக் ஜனசக்தி கட்சி எனும் எளிய மக்களின் அரசியல் முகம் என்பதை நாம் மீண்டும் நிறுவுவோம். இந்த தேர்தலில் நமது கட்சியின் பலத்தை நாட்டிற்கு காட்டுவோம். நமது வேட்பாளர்களை பெரும் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்க உறுதி ஏற்று, தொடர்ந்து உழைப்போம்" என்றார்.