ராஜஸ்தான் மாநிலத்தில் முதலைச்சர் அசோக் கெலாட்டுக்கு எதிராக இளம் தலைவர் சச்சின் பைலட் போர்க்கொடி தூக்கினார். இதனால், மத்திய பிரதேசத்தைத் தொடர்ந்து ராஜஸ்தானிலும் காங்கிரஸ் ஆட்சி தொடர்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், சனிக்கிழமை ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அதிருப்தி எம்எல்ஏ-களை திரும்ப ஏற்றுக்கொள்வீர்களா என்று செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு பதிலளித்த அசோக் கெலாட், "அது கட்சியின் தலைமை எடுக்கும் முடிவை பொறுத்து. கட்சி தலைமை அவர்களை மன்னித்தால், நான் அவர்களை ஏற்றுக்கொள்வேன்.
கட்சி தலைமை என் மீது நம்பிக்கை வைத்துள்ளது. அதனால்தான் மத்திய அமைச்சரவை, காங்கிரஸ் தேசிய மற்றும் மாநில தலைவர், முதலமைச்சர் என பல பதவிகளை என்னை நம்பி அளித்தனர். நான் மக்களுக்கு தொடர்ந்து சேவையாற்றிவருகிறேன், இதைத் தாண்டி நான் என்ன செய்ய முடியும்?
எங்களுக்கு யாருடனும் தனிப்பட்ட முறையில் பிரச்னை இல்லை. ஒரு ஜனநாயக நாட்டில், சித்தாந்த ரீதியாகவும், கொள்கை ரீதியாகவும் மட்டுமே மோதல் நடைபெறுமே தவிர அரசை கவிழ்க்க நடக்காது. ஆனால், ராஜஸ்தான் அரசை கவிழ்க்க பாஜக தொடர்ந்து முயன்றுவருகிறது. இந்த நாடகத்தை மோடி முடிக்க வேண்டும்.
ராஜஸ்தான் அரசை கவிழ்க்கும் திட்டத்தில் மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் நேரடியாக ஈடுபட்டார். இதனால் தார்மீக பொறுப்பெற்று அவர் பதவி விலக வேண்டும். நாட்டில் ஜனநாயகம் அச்சுறுத்தலுக்கு உள்ளாகி வருகிறது" என்றார்.
200 உறுப்பினர்களை கொண்ட ராஜஸ்தான் சட்டப்பேரவையில் தற்போது 107 உறுப்பினர்களின் ஆதரவு முதலமைச்சர் அசோக் கெலாட் அரசுக்கு உள்ளது.
இதையும் படிங்க: ஆற்றை கடக்க கர்ப்பிணியை கூடையில் தூக்கிச் சென்ற அவலம்