லக்னோ: கோவிட்-19 தொற்று காரணமாக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு காலத்தில் இந்தியாவில் சைபர் குற்றங்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்தது.
அதன்படி, உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் உதவி ஆணையர் அபய் குமார் மிஸ்ராவின் பெயரில் சிலர் போலி ஃபேஸ்புக் கணக்கை உருவாக்கியுள்ளனர். அந்தப் போலி ஃபேஸ்புக் கணக்கின் நட்பு வட்டாரத்தில் இணைந்தவர்களிடம், சில உடனடித் தேவைக்காக ஐம்பதாயிரம் ரூபாய் தேவைப்படுவதாக அபய் குமார் குறுஞ்செய்தி அனுப்புவதைப் போல சைபர் குற்றவாளிகள் குறுஞ்செய்தி அனுப்பியுள்ளனர்.
அப்படி பணம் தேவை என்று குறுஞ்செய்தி அனுப்பியவர்களில் ஒருவர் அபய் குமாரின் நெருங்கிய நண்பர். எனவே, என்ன அவசர தேவை என்பதை அறிந்துகொள்ள அவர் அபய் குமாரை நேரடியாகத் தொடர்புகொண்டுள்ளார். அப்போதுதான், இந்த மோசடி வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
இதைத்தொடர்ந்து, அபய் குமார் உடனயாக லக்னோ சைபர் பிரிவில் இந்த மோசடி சம்பவம் குறித்து புகார் அளித்தார். அவரது புகாரின் அடிப்படையில் லக்னோ சைபர் காவல் துறையினர் விசாரணையை துரிதப்படுத்தினர்.
விசாரணையில், இதேபோல 12 போலி கணக்குகள் உருவாக்கப்பட்டுள்ளதை சைபர் பிரிவு காவல் துறையினர் கண்டுபிடித்தனர். அந்தப் போலி கணக்குகளிலிருந்தும், மோசடி செய்ய நண்பர்கள், உறவினர்களுக்கு குறுஞ்செய்திகள் அனுப்பப்பட்டுள்ளதும் தெரியவந்துள்ளது.
இது குறித்து சைபர் பிரிவின் இணை ஆணையர் விவேக் ரஞ்சன் ராய் கூறுகையில், “இணையத்தைப் பயன்படுத்துபவர்கள் அதிக விழிப்புணர்வுடன் இருந்தால் இதுபோன்ற குற்றங்களைத் தடுக்கலாம்.
இது குறித்து, விழிப்புணர்வை ஏற்படுத்த பரப்புரை திட்டம் ஒன்றையும் தொடங்கியுள்ளோம். மேலும், இதுபோன்ற சைபர் குற்றங்களிலிருந்து தப்பிக்க சமூக வலைதளங்களைப் பயன்படுத்துபவர்களுக்கு சில வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளோம்.
அதன்படி, சமூக வலைதளங்களைப் பயன்படுத்துபவர்கள் தனது முகப்புப் (Profile) படத்தை பதிவிறக்கம் செய்ய முடியாத வகையில் முடக்க வேண்டும். அடுத்தது, பயனாளர்கள் தங்கள் நண்பர் பட்டியலை வெளியாள்கள் பார்க்க முடியாத வகையில் மறைத்துவைக்க வேண்டும்” என்றார்.
இதையும் படிங்க குற்றம் - 01: 'ஜூஸ் ஜேக்கிங்' மூலம் ஹேக் செய்யப்படும் ஸ்மார்ட்போன்கள்