கேரளா மாநிலம் திருச்சூர் அருகே புத்தம் பள்ளியைச் சேர்ந்தவர் கண்ணன் கோபிநாதன். ஐஏஎஸ் அலுவலரான இவர் தாதர் - நாகர் ஹவேலி யூனியன் பிரதேசத்தில் மாவட்ட ஆட்சியராக பணியாற்றி வருகிறார். 2018ஆம் ஆண்டு கேரளாவை புரட்டி போட்ட வெள்ளத்தில் மக்களோடு மக்களாக நின்று நிவாரண பணியில் ஈடுபட்டார். செங்கண்ணூரில் உள்ள நிவாரண முகாமில் தான் ஒரு ஐஏஎஸ் அலுவலர் என்பதை மறைத்து 9 நாட்கள் மக்களுக்கு உணவுப் பொருட்களை பிரித்துக்கொடுக்கும் பணியில் ஈடுபட்டு வந்தார்.
8 நாட்கள் வரை இவர் யார் என்று தெரியாமல் குழம்பி போன அரசு அலுவலர்கள் 9ஆம் நாளில் இவர் யார் என்று தெரிய ஆரம்பித்தது.
இதனையடுத்து, சமூகவலைதளங்களில் இவரை பற்றிய செய்திகள் வெளியாகி அனைவரது பாராட்டையும் பெற்றார். தன்னுடன் நிவார பணிகளில் ஈடுபட்டவர்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படமும் வெளியாகி வைரலானது. இந்நிலையில், கண்ணன் கோபிநாதன் தனது பணியை ராஜினாமா செய்திருப்பது கேரள மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து அவர் கூறுகையில், எனது பணியை சுதந்திரத்துடன், ஜனநாயக கடமையுடன் செயலாற்ற நினைக்கிறேன். இதனை மற்றவருக்கு புரிய வைப்பது எனது கடமையில்லை, ஆகையால் தனது பதவியை ராஜினாமா செய்கிறேன். எனது ராஜினாமா கடிதத்தை ஏற்கும்வரை பணியில் நீடிப்பேன் என்று தெரிவித்துள்ளார்.