ஆந்திர மாநிலம், சித்தூர் மக்களவைத் தொகுதியில் உள்ள ஐந்து வாக்குச்சாவடிகளுக்கு மறுவாக்குப்பதிவுக்கு தடைகோரி அம்மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தேர்தல் ஆணையத்துக்கு நேற்று கடிதம் அனுப்பினார். இதுகுறித்து ஆலோசிப்பதற்காக, இன்று டெல்லியில் இந்தியத் தேர்தல் ஆணையர் சுனில் அரோராவை சந்தித்துப் பேசினார்.
இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், நடைபெற்று வரும் மக்களவைத் தேர்தலில் தேர்தல் ஆணையம் மேற்கொண்டு நடவடிக்கைகள் சர்ச்சைக்குரியதாகவும், அரசாங்கத்துக்கு சாதகமாகவுமாவே இருந்துவருகிறது. கடந்த சில நாட்களாக தேர்தல் ஆணையம் மேற்கொண்டுவரும் நடவடிக்கைகள் அனைத்தும் மத்திய அரசாங்கத்துக்கு சார்பாகவே உள்ளது. தேர்தல் ஆணையத்துடன் நாம் சண்டை போடுவது துரதிருஷ்டவசமானது. ஐந்து வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு நடத்த உத்தரவிட்டுள்ளனர். மறுவாக்குப்பதிவு எனக்கு வேண்டாம். எனக்கு வேண்டியதெல்லாம் தேர்தல் ஆணையம் வெளிப்படைத் தன்மையுடன் இருக்க வேண்டும் என்பதே விருப்பம்.
நாட்டின் மூத்த அரசியல் தலைவர் போல தேர்தல் ஆணையம் நடந்து கொள்கிறது. தன்னுடைய 25 ஆண்டுக்கால அரசியல் வாழ்க்கையில் இதுபோன்ற தேர்தல் ஆணையத்தின் ஒருதலைப்பட்சமான அணுகுமுறையைப் பார்த்ததில்லை. பாஜக எம்பிகள், அமித் ஷா, பிரதமர் மோடி, தேர்தல் நடத்தை விதிகளை மீறியதற்கு தேர்தல் ஆணையம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. போபால் மக்களவை பாஜக வேட்பாளர் பிரக்யா சிங் தாகூர் நம் தேசப்பிதா காந்தியை அவமதித்த போதிலும் எந்த ஒரு நடவடிக்கை எடுக்கவில்லை, என்று கடுமையாக சாடினார்.
டெல்லியில் இன்று நடைபெற்ற பிரதமரின் செய்தியாளர் சந்திப்பு குறித்த கேள்விக்கு, "இதிலிருந்து பிரதமர் மோடியிடம் பதில்கள் இல்லை என்பது தெரிகிறது. அவரிடம் இருப்பதெல்லாம் ரெடிமேட் ஸ்கிரிப்தான். பாஜகவின் அடக்குமுறையால் எதிர்க்கட்சிகள் பாதிப்படைந்துள்ளது" என்றார்.