இந்திய அரசியலமைப்புச் சட்டம் 370 பிரிவை நீக்கியதன் மூலம், காஷ்மீர் மாநிலத்திற்கு அளிக்கப்பட்டுவந்த சிறப்புத் தகுதிகள் பறிக்கப்பட்டுள்ளன. முன்னதாக, அந்த மாநிலத்தின் முக்கியத் தலைவர்களும், முன்னாள் முதலமைச்சர்களுமான ஃபரூக் அப்துல்லா, உமர் அப்துல்லா, மெகபூபா முஃப்தி ஆகியோர் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டது. ஆனால், தற்போது அவர்கள் எங்கே இருக்கின்றார்கள் என்ற தகவல் வெளிவரவில்லை.
இந்நிலையில் செய்தியாளர்களை இன்று சந்தித்த மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, "ஜம்மு - காஷ்மீரை பிரிக்கும் சட்டத்திருத்த மசோதாவுக்கு நாங்கள் ஆதரவு அளிக்க மாட்டோம். நிரந்தரத் தீர்வைக் காண அனைவரிடமும் கலந்தாலோசித்திருக்க வேண்டும்.
ஃபரூக் அப்துல்லா, உமர் அப்துல்லா, மெகபூபா முஃப்தி ஆகியோர் பற்றிய தகவல் ஏதும் எனக்குத் தெரியவில்லை. அவர்கள் பயங்கரவாதிகள் அல்ல; தனிமைப்படுத்தி விடக்கூடாது. ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை வைத்து அவர்கள் விடுவிக்கப்பட வேண்டும்" என்றார்.