மத்திய அரசு கடந்த மாதம் குடியுரிமை திருத்தச் சட்டத்தை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியது. இந்தச் சட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்றன. கடந்த வாரம் கேரளா அரசு குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தது.
இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய கேரள ஆளுநர் ஆரிப் முகமது கான், "ஆளுநரின் ஒப்புதலின்றி மாநில அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கலாமா என்பது குறித்து நான் ஆராயவுள்ளேன். ஒப்புதல் பெறாவிட்டாலும் குறைந்தபட்சம் என்னிடம் தகவல் தெரிவித்திருக்கலாம்.
நீதித்துறையை ஒருவர் நாடுவது குறித்து எனக்கு எவ்வித ஆட்சேபனையும் இல்லை. ஆனால் மாநில அரசியலமைப்பின் தலைவர் நான்.என்னிடம் இதுகுறித்து ஆலோசித்திருக்கலாம். நானே இதை செய்தித்தாள்கள் மூலம்தான் அறிந்துகொண்டேன்" என்றார்.
மேலும், கேரள அரசு உள்ளாட்சி அமைப்புகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவேண்டும் என்று நிறைவேற்றியிருந்த அவசர சட்டத்தை கேரள ஆளுநர் நிராகரித்ததாக தகவல் வெளியானது. இதுகுறித்து செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு, "நான் ஒன்னும் ரப்பர் ஸ்டாம்ப் இல்லை, நான் எனது மூளையை பயன்படுத்துவேன். இந்த அவசர சட்டம் குறித்து ஆலோசிக்க எனக்கு சிறிது கால அவகாசம் தேவை.
இதுகுறித்த சில கேள்விகளை எழுப்பியுள்ளேன். அதற்கு பதில் கிடைக்கவேண்டும். நான் இந்தச் சட்டத்துக்கு அனுமதியளிக்க மாட்டேன் என்று கூறவில்லை" என்றும் அவர் கூறினார்.
இதையும் படிங்க: காவி உடை அணிந்த திருவள்ளுவர் படத்தைப் பதிவிட்டு பின்னர் நீக்கிய வெங்கையா நாயுடு!