தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள நேரு உயிரியல் பூங்கா ஆசியாவின் சிறந்த பூங்காக்களில் ஒன்றாகும். நாட்டின் மிகப்பெரிய உயிரியல் பூங்காவான இங்கு ஆண்டுதோறும் 30 லட்சம் பார்வையாளர்கள் வருவது வழக்கம்.
கரோனா அச்சம் காரணமாக இந்தப் பூங்கா கடந்த மார்ச் மாதம் மூடப்பட்டது. இந்நிலையில் மத்திய உயிரியல் பூங்கா ஆணையம் அனுமதி வழங்கியதை அடுத்து, நேரு உயிரியல் பூங்கா இன்று முதல் பார்வையாளர்களுக்காக மீண்டும் திறக்கப்பட்டது.
முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியை கடைப்பிடித்தல் போன்ற கரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பூங்காவிற்கு வருகை தரும் பார்வையாளர்கள் கடைப்பிடிக்க வேண்டுமென பூங்கா நிர்வாகிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
விதிமுறைகளை மீறுவோர் பூங்காவிலிருந்து வெளியேற்றப்படுவார்கள் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளனர். மேலும் வெளிப்புறங்களில் எச்சில் துப்புபவர்களுக்கு ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்றும் தெரிவித்தனர். விதிமுறைகள் சரியாக பின்பற்றப்படுகின்றனவா என்பதை கண்காணிப்பதற்காக ஆங்காங்கே பூங்காவின் ஊழியர்கள் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
விடுமுறை நாட்களில் 10 வயதிற்கு உட்பட்டவர்கள் மற்றும் 65 வயதிற்கு மேற்பட்டவர்கள் தங்களது பாதுகாப்பை கருதி பூங்காவை பார்வையிடுவதை தவிர்க்க வேண்டும் என பூங்கா நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது.
இன்று முதல் நாள் என்பதால் கூட்டம் குறைவாகவே இருந்தது என்றும், வரும் நாட்களில் பார்வையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்றும் பூங்காவின் நிர்வாகிகள் தெரிவித்தனர். மேலும், பார்வையாளர்கள் தேவைப்பட்டால் தங்களது டிக்கெட்டுகளை ஆன்லைனில் பெற்றுக்கொள்ளலாம் என்றும் தெரிவித்துள்ளனர்.