இந்தியாவின் முன்னணி பிராண்டுகளால் விற்பனை செய்யப்படும் தேனின் அசல் தூய்மைக்கான பரிசோதனையை அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மையம் (CSE) மேற்கொண்டது.
இந்த தூய்மை சோதனை டாபர், பதஞ்சலி, பைத்யநாத் மற்றும் ஜண்டு உள்ளிட்ட 22 பிராண்டுகளில் மேற்கொள்ளப்பட்டது. இதில், இந்தியாவில் முக்கிய பிராண்டுகளால் விற்பனை செய்யப்படும் தேனின் அசல் தூய்மைக்கான பரிசோதனையில் 17 பிராண்டுகள் தோல்வி அடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேன் வணிகத்தில் முன்னணியில் உள்ள இந்திய நிறுவனங்கள், தேனுடன் கலப்படம் செய்வதற்காக சீனாவிலிருந்து செயற்கை சர்க்கரை பாகை இறக்குமதி செய்கின்றன என்பதும் தெரிய வந்துள்ளது.
தேன் சர்க்கரையுடன் கலப்படம் செய்யப்பட்டுள்ளதா என்பதை அறிய பல தூய்மை சோதனைகள் உள்ளன. சி.எஸ்.இ உணவு ஆய்வாளர்கள், டாபர், பதஞ்சலி, பைத்யநாத் மற்றும் ஜண்டு உள்ளிட்ட 22 பிராண்டுகளின் மூல மற்றும் பதப்படுத்தப்பட்ட தேனைத் தேர்ந்தெடுத்து, இந்திய உணவு ஒழுங்குமுறைச் சட்டங்களின் கீழ், வருவதற்கான அங்கீகாரம் பெறுவதற்கான சோதனைகளுக்கு உட்படுத்தினர்.
இதில், 22 பிராண்டுகளில், ஐந்து பிராண்டுகள் மட்டுமே தேர்வாகியுள்ளது. என்.எம்.ஆர் சோதனை இந்திய சட்டத்துக்குத் தேவையில்லை என்றாலும், தேனை ஏற்றுமதி செய்ய விரும்பும் இந்திய நிறுவனங்களுக்கு இது தேவைப்படுகிறது.
"நாங்கள் கண்டுபிடித்தது அதிர்ச்சியளிக்கிறது" என்று சிஎஸ்இயின் உணவுப் பாதுகாப்பு மற்றும் நச்சுக் குழுவின் திட்ட இயக்குநர் அமித் குரானா கூறியுள்ளார்.
"இந்தியாவில் கலப்படம் செய்யப்பட்ட வர்த்தகம் எவ்வாறு வளர்ச்சியடைந்துள்ளது என்பதை இது காட்டுகிறது. தேன் வணிகத்தில் முன்னணியில் உள்ள இந்திய நிறுவனங்கள் தேனுடன் கலப்படம் செய்வதற்காக சீனாவிலிருந்து செயற்கை சர்க்கரை பாகை இறக்குமதி செய்கின்றன என்பது தெரிய வந்துள்ளது" என ஆய்வு மேற்கொண்ட அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.
அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மைய பொது இயக்குநர் சுனிதா நரேன், 'தொற்றுநோயை எதிர்த்துப் போராடும் என்ற நம்பிக்கையில் பொதுமக்கள் தேனை உட்கொள்கின்றனர். ஆனால், சர்க்கரையுடன் கலப்படம் செய்யப்பட்ட தேன் நமது உடல்நலத்திற்கு எந்தவொரு நன்மையையும், ஆரோக்கியத்தையும் வழங்காது. இந்தப் பாகு கலப்படம் செய்யப்பட்ட தேனை தூய தேனாக காண்பிக்க சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் செயற்கை சர்க்கரை பாகை பயன்படுத்துகின்றனர்" எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: தேநீர் வாங்கினால் முகக்கவசம் இலவசம் - கடைக்காரரின் சமூக சேவை!