கர்நாடக மாநில கால்நடைத்துறை அமைச்சர் பிரபு சவுஹான், சட்டப்பேரவையில் பசுவதை தடுப்பு மசோதாவை தாக்கல் செய்தார். இந்த மசோதாவினை தாக்கல் செய்வது குறித்து அலுவல் ஆய்வுக் குழுவில் விவாதிக்கப்படவில்லை என்பதால், இது ஜனநாயகத்தை மீறும் செயல் என்று கூறி, எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டனர். இதையடுத்து, காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தள கட்சிகள் வெளிநடப்பு செய்தது. எதிர்க்கட்சிகளின் கடும் அமளிக்கு இடையே கர்நாடக சட்டப்பேரவையில் பசுவதை தடுப்பு மசோதா டிசம்பர் 9ஆம் தேதி நிறைவேற்றப்பட்டது.
இதனைத்தொடர்ந்து, இன்று கர்நாடக சட்டமேலவையில், பசுவதை தடுப்பு மசோதா நிறைவேற்றுவது தொடர்பாக எழுந்த வாக்குவாதத்தில் பாஜக, காங்கிரஸ் சட்டமேலவை உறுப்பினர்கள் ஒருவருக்கொருவர் மோதிக்கொண்டனர்.
அப்போது, அவையின் துணைத் தலைவர் உபா சபாபதி, காங்கிரஸ் சட்டமேலவை உறுப்பினர்களால் நாற்காலியில் இருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டார். துணைத் தலைவரை நாற்காலியில் இருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்ட பின்னர், காங்கிரஸ் மற்றும் பாஜகவின் சட்டமேலவை உறுப்பினர்கள் ஒருவருக்கு ஒருவர் வாக்குவாதத்திலும், கைகலப்பிலும் ஈடுபட்டனர். இதனையடுத்து, உறுப்பினர்களின் மோதல் போக்கை கட்டுப்படுத்த அவை காவலர்களைக் கொண்டு, உறுப்பினர்கள் வெளியேற்றப்பட்டனர்.
அவை ஒழுங்கை மீறிய உறுப்பினர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: காஷ்மீரின் 4 மாவட்டங்களில் இணையசேவை துண்டிப்பு