புதுச்சேரி: மக்கள் பணிகளை ஆளுநர் செய்யவிடாமல் தடுப்பதால், தான் ராஜினாமா செய்யப் போவதாக சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
யூனியன் பிரதேசத்தின் ஏனாம் பகுதி ஆந்திர மாநிலம் காக்கிநாடா அருகேயுள்ளது. இதுவரை அங்கு ஒருவர் கூட கரோனாவால் பாதிக்கப்படவில்லை. காரணம் ஆந்திர - ஏனாம் எல்லைகள் மார்ச் 26ஆம் தேதியே மூடப்பட்டன.
இதனால் ஊருக்குள் யாரும் அனுமதிக்கப்படாத நிலையில், புதுச்சேரி ஏனாமைச் சேர்ந்த இரண்டு இளைஞர்கள் ஹைதராபாத், புனே ஆகிய பகுதிகளில் கூலி வேலை செய்துவிட்டு, 26ஆம் தேதி ஏனாம் திரும்பியுள்ளனர். இவர்களை காவல் துறையினர் இன்று வரை ஊருக்குள் அனுமதிக்கவில்லை. அங்கு எல்லையில் மழை, வெயிலில் வாடும் இவர்களை ஊருக்குள் அனுமதித்து தனிமைப்படுத்த முதலமைச்சர் உத்தரவிட்டும் மண்டல நிர்வாக அலுவலர்கள் அவர்களை அனுமதிக்கவில்லை.
கரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக இவர்கள் அனுமதிக்கப்படமாட்டார்கள் என மாவட்ட நிர்வாக அலுவலர்கள் தெரிவித்துள்ளனர். வெளிமாநிலத்திற்கு வேலைக்குச் சென்று புதுச்சேரி ஏனாம் பகுதியில் நான்கு நாள்களாக நடந்து, சொந்த மண்ணுக்கு திரும்பிய மக்களை விரட்டுவது நியாயமா என கேள்வி எழுப்பியுள்ளார் சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ்.
என் மீதுள்ள கோபத்தால், மக்களை ஆளுநர் கிரண்பேடி பழிவாங்குகிறார். 24 மணி நேரத்தில் 8 பேரை ஊருக்குள் நுழைய அனுமதிக்க வேண்டும். புதுச்சேரி ஏனாம் அருகேயுள்ள ஆந்திர அரசு அவர்களது மக்களை மீண்டும் அவர்களது எல்லைக்குள் அனுமதிக்கும்போது, புதுச்சேரி அரசு அனுமதிக்காதது ஏன் என கேள்வி எழுப்பினார்.
மக்கள் நலத்திட்ட பணிகளை தொடர்ந்து முடக்கிவரும் ஆளுநர் தனது எல்லையை மீறி செயல்பட்டு வருகிறார். அராஜகத்தில் ஈடுபட்டு வருகிறார். இதே நிலை தொடரும் பட்சத்தில் ஜூன் 6ஆம் தேதி தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்யவுள்ளதாக அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.