கோவிட்-19 வைரஸ் தொற்றின் தாக்கம் இந்தியாவில் நாளுக்கு நாள் மோசமாகிவருகிறது. தமிழ்நாட்டில் இதுவரை 67 பேருக்கு வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மதுரை ராசாசி மருத்துவமனையில் ஒருவர் உயிரிழந்தார். மேலும், அவர்களில் ஐந்து பேர் சிகிச்சை நிறைவடைந்து வீடு திரும்பியுள்ளனர். மேலும், 61 பேருக்கு தொடர்ந்து சிகிச்சையளிக்கப்பட்டுவருகிறது.
இந்நிலையில், வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த தமிழ்நாடு அரசு எடுத்த முயற்சிகளை மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் பாராட்டியதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து விஜயபாஸ்கர் தனது ட்விட்டர் பக்கத்தில், "மத்திய அமைச்சர் ஹர்ஷ்வர்தன் என்னிடம் தொலைபேசியில் பேசினார். தமிழ்நாட்டில் தற்போது கோவிட் - 19 வைரஸ் பரவலின் நிலைமை குறித்து கேட்டறிந்தார்.
வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த முதலமைச்சர் மற்றும் சுகாதாரத் துறையினர் எடுத்துவரும் முயற்சிகளை பாராட்டினார். மேலும், மத்திய அரசு எப்போதும் தமிழ்நாட்டிற்கு ஆதரவாக இருக்கும் என்றும் கூறினார்" என்று பதிவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: தமிழ்நாட்டில் கரோனாவால் பாதிக்கப்பட்ட இருவர் குணமடைந்தனர்!