'நான்தான் கோவிட்-19 பேய் வந்திருக்கேன்’ - அலறவிடும் விழிப்புணர்வு - கரோனா விழிப்புணர்வு விஜயபுரா
விஜயபுரா: தலையில்லாமல் காட்சியளிக்கும் கொடூரமான பேய் போல வேடமணிந்து கரோனா வைரஸ் பாதிப்பு குறித்து ஒருவர் வித்தியாசமான முறையில் விழிப்புணர்வை ஏற்படுத்தி அப்பகுதி பொதுமக்களை அலறவிடுகிறார்.

இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்று பாதிப்பின் பரவலைக் கட்டுப்படுத்த மே 3ஆம் தேதிவரை ஊரடங்கு உத்தரவை பிரதமர் நரேந்திர மோடி பிறப்பித்துள்ளார். ஊரடங்கு உத்தரவு காரணமாக அத்தியாவசிய தேவைகள் தவிர்த்து, தேவையில்லாமல் பொதுமக்கள் வெளியில் சுற்றித்திரிந்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
பொதுமக்களின் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்த அந்தந்த மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகின்றன. பல இடங்களில் தன்னார்வலர்களும் தாமாக முன்வந்து சாலைகளில் ஓவியம் தீட்டுவது, வித்தியாசமான முறையில் வேடமணிந்து பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துவது என கரோனா தொற்று குறித்து மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்திவருகின்றனர்.
அந்த வகையில் கர்நாடக மாநிலம் விஜயபுரா மாவட்டத்தைச் சேர்ந்த கே.ஆர். கடேச்சூர் என்ற நபர், பொதுமக்களிடம் கரோனா தொற்று குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் முயற்சியாகவும், தேவையில்லாமல் மக்கள் வெளியில் சுற்றாமல் வீட்டிலேயே இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில், தலையில்லாமல் முண்டம்போல காட்சியளிக்கும் பேய் போன்று வேடமணிந்த ஒருவர் மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்திவருகிறார்.
அதுமட்டுமில்லாமல், “நான்தான் கோவிட்- 19 வைரஸ், அனைவரும் வீட்டிலேயே பாதுகாப்பாக இருங்கள்” என அறிவிப்பு ஒன்றையும் அவரது உடலில் எழுதிவைத்துள்ளார். இவரின் இந்த வித்தியாசமான விழிப்புணர்வு முயற்சியின் மூலம் அப்பகுதி பொதுமக்கள் வீட்டைவிட்டு வெளியில் செல்ல முடியாத வகையில் பலரையும் அலறவிட்டுவருகிறார்.
இதையும் படிங்க: ஜோக்கர் வேடமணிந்து கரோனா வைரஸ் விழிப்புணர்வு ஏற்படுத்திய மேஜிக்மேன்!