செய்தியாளர்களிடம் இன்று பேசிய இந்தியத் தலைமை நீதிபதி எஸ்.ஏ. பாப்டே, இந்த நெருக்கடி நேரத்தில் நீதித்துறை தன்னால் முடிந்த அனைத்தையும் செய்து வருவதாகத் தெரிவித்துள்ளார்.
பணம், நிவாரணப் பொருட்கள் வழங்குதல் உள்ளிட்டவற்றை எவ்வாறு திறம்பட கையாள்வது என்பதை அரசு தான் தீர்மானிக்க வேண்டும் என்றும் நெருக்கடியை ஒரு மனிதாபிமான கோணத்தில் விரைந்து கையாள வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மக்களுக்கு உரிய நீதி வழங்கப்படுவதில்லை என்கின்ற கருத்துக்கு மறுப்பு தெரிவித்த அவர், உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளின் எண்ணிக்கை உண்மையில் ஊரடங்கு காலத்தில் அதிகரித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். “2020 ஜனவரியில், உச்ச நீதிமன்றத்தில் தினமும் 205 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன. ஆனால் ஏப்ரல் மாதத்தில் 305 வழக்குகள் இணையதளம் மூலம் பதிவு செய்யப்பட்டுள்ளன” என்றும் தெரிவித்துள்ளார்.
குற்ற விகிதம் குறைந்துள்ளபோதும் குற்றவாளிகளின் மீதான காவல் துறையினரின் நடவடிக்கைகளும் குறைந்துள்ளதாக பாப்டே தெரிவித்துள்ளார்.
ஊரடங்கின் போது நடைபெறும் உச்ச நீதிமன்ற விசாரணைகள் குறித்து பேசிய அவர், ”வீடியோ கான்பரன்சிங் மூலம் விசாரணைகள் நடைபெற்று வந்தாலும் இது ஒரு முழு தீர்வு அல்ல. மனித உயிர்கள் விலைமதிப்பற்றவை, குடிமக்களின் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் எதையும் அனுமதிக்க முடியாது. அவ்வாறு நடந்தால், நீதிமன்றம் தலையிட்டு மக்களின் உரிமைகளை உடனடியாக மீட்டெடுக்கும்” என்றும் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: கரோனா: சிகரெட் திருடனால் நீதிபதிக்கு வந்த சோதனை!