இதுகுறித்து உயிரிழந்த பெண்ணின் சகோதரர் ஒருவர், கைது செய்யப்பட்ட 4 குற்றவாளிகளின் குடும்பங்களும் இந்த கிராமத்தில் அதிக செல்வாக்கு உடையவர்கள். அதனால் இங்குள்ள தலித் குடும்பங்கள் அவர்களை பகைத்துக் கொண்டு எங்களுக்கு ஆதரவளிக்க விரும்பவில்லை. இங்கு எங்களுடன் எந்தவித பேச்சுவார்த்தையுமின்றி 63 உயர்சாதி குடும்பங்கள் இருக்கின்றன. குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருப்பதால் இங்கு எங்களுக்கு அச்சுறுத்தல் அதிகம். அரசாங்கம் எங்களுக்கு டெல்லியில் தங்குவதற்கு ஒரு வீடு ஏற்பாடு செய்து கொடுத்தால், எங்கள் வாழ்க்கை அமைதியாக இருக்கும் என தெரிவித்தார்.
இது தொடர்பாக பத்திரிகையாளர்களை சந்தித்த பாதிக்கப்பட்ட பெண்ணின் வக்கீல் சீமா குஷ்வாஹா, இந்த வழக்கை டெல்லிக்கு மாற்ற கோரிக்கை விடுத்துள்ளோம். அதேபோல் இந்த வழக்கில் அஜாக்கிரதையாக செயல்பட்ட உத்தரப் பிரதேச அலுவலர்களின் பெயர்களை இதில் சேர்க்க வலியுறுத்தியுள்ளோம். பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தார் அந்த கிராமத்தில் வசிப்பது ஆபத்தானது என்றார்.
பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தாருக்கு சிஆர்பிஎப் காவலர்கள் பாதுகாப்பு வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. ஆனால் அவர்கள் முறையாக பாதுகாப்பு வழங்கவில்லை என கூறப்படுகிறது.