ஜம்மு - காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து, மத்திய அரசால் நீக்கப்பட்டதையடுத்து அம்மாநிலத்திற்குச் செல்ல முக்கிய தலைவர்களுக்கு தடை விதிக்கப்பட்டது. அந்த சூழலில் காஷ்மீர் மாநிலத்தின் நிலை குறித்து ஆலோசனை மேற்கொள்ள மற்ற அரசியல் தலைவர்களைப் பார்க்கச் சென்ற குலாம் நபி ஆசாத், ஸ்ரீநகர் விமான நிலையத்தில் இருந்து டெல்லிக்கு திருப்பி அனுப்பப்பட்டார்.
இதையடுத்து, காஷ்மீர் மாநிலத்திற்குச் சென்று ஆய்வு மேற்கொள்ள தன்னை அனுமதிக்க வேண்டும் என குலாம் நபி ஆசாத், உச்ச நீதிமன்றத்தில் மனு அளித்தார். இந்த மனு மீதான விசாரணை தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் முன்னிலையில் இன்று விசாரிக்கப்பட்டது.
விசாரணைக்கு பின், ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தின் நான்கு மாவட்டங்களான பாரமுல்லா, ஸ்ரீநகர், ஆனந்த்நாக், ஜம்மு உள்ளிட்ட பகுதிகளுக்குச் செல்ல அனுமதி வழங்கப்பட்டது. அப்பகுதிக்கு சென்று குலாம் நபி ஆசாத் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடாது என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும், ‘உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், தேவை ஏற்பட்டால் நேரடியாக நான் காஷ்மீர் சென்று ஆய்வு மேற்கொள்வேன். அங்கே பணியாற்றும் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியிடமும் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு உத்தவிட்டுள்ளேன்’ என்றார்.