பிரென்ஞ்ச் இன்ஸ்டியூட் ஆஃப் புதுச்சேரி மற்றும் புதுச்சேரி வேளாண்த் துறை சார்பில் ”மாநில உணவு பழக்கவழக்கம் 2020” எனும் தலைப்பில் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், இயற்கை முறை விவசாயிகள், உணவு தயாரிப்பு வியாபாரம் செய்பவர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
22ஆம் தேதி தொடங்கிய இந்நிகழ்ச்சியின் இன்றைய நிறைவு நாளையொட்டி, இயற்கை விவசாயம், இயற்கை உணவு, காய்கறி, கனி விதை கண்காட்சிகள் நடைபெற்றன. கண்காட்சியை புதுச்சேரி பிரெஞ்ச் துணைத் தூதுவர் காத்தரின் ஸ்வாட், விழுப்புரம் மக்களவை உறுப்பினர் ரவிக்குமார், புதுச்சேரி மக்களவை உறுப்பினர் வி.வைத்தியலிங்கம் ஆகியோர் கலந்துகொண்டு கண்காட்சியினை தொடங்கி வைத்தனர்.
இக்கண்காட்சியில் மாடித் தோட்டம் வளர்ப்பு, மூலிகைக் கீரைகள், பழங்கள், கிழங்கு வகைகள், இயற்கை விவசாயம் குறித்த விதைப் பொருட்கள் கண்காட்சியில் இடம் பெற்றிருந்தன. இதில், விழுப்புரம் மாவட்டம் ஆரோவில், திண்டிவனம் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து வந்திருந்த விவசாயிகள் தங்கள் பொருட்களை கண்காட்சியில் பார்வைக்கு வைத்திருந்தனர். இக்கண்காட்சியை ஏராளமான வெளிநாட்டினரும் பார்வையிட்டனர்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த ரவிக்குமார், ”இயற்கை விவசாயம் மீது ஆர்வம் கொண்டுள்ள விவசாயிகளுக்கு அவர்கள் பொருட்கள் விற்பனை செய்வதற்கான மார்க்கெட்டிங் வசதியை அரசு செய்து தரவேண்டும். ஜிஎஸ்டி வரி விதிப்பு இயற்கை வேளாண்மை உற்பத்திப் பொருள்களுக்கு வரி விலக்கு அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையை நிதி அமைச்சரை சந்தித்து வலியுறுத்துவேன்” என்றார்.
இதையும் படிங்க: பிளாஸ்டிக் ஒழிப்பில் பங்காற்றும் பழங்குடியினர்கள்!