இந்தியா- பாகிஸ்தான் உறவில் புதிய அத்தியாயத்தை ஏற்படுத்திய கர்தாப்பூர் சாலை திறக்கப்படும் சில மணி நேரத்துக்கு முன்னர் வரை, சீக்கிய யாத்ரீகர்களுக்கு பாகிஸ்தான் விதித்த 20 அமெரிக்க டாலர் கட்டணம் சச்சரவு தீராமல் இருந்தது.
இந்த நிலையில் இம்ரான் கான், நுழைவு சீட்டை (பாஸ்போர்ட்) காண்பித்தால், அந்த கட்டணத்திலிருந்து விலக்கு அளிப்பதாக ட்வீட் செய்தார். இது பாகிஸ்தானில் ஒருவித உள்நாட்டு குழப்பத்தை ஏற்படுத்தியது. ராணுவ தரப்பில் அதிருப்தியும் வெளிப்படுத்தப்பட்டது. எனினும் சீக்கியர்கள் மிகுந்த உற்சாகத்தில் திளைத்திருந்தனர். குருநானக் திருக்காட்சி கிடைக்க போகிறது என்பதே அதற்கு காரணம்.
இதற்கிடையில் பிரதமர் நரேந்திர மோடியும், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானும் தனித்தனியே சாலை வழித்தடத்தை திறந்து வைத்தனர். இந்த திட்டம் சீக்கியர்களுக்கு மனஉற்சாகத்தை ஏற்படுத்தியிருந்தது என்றால் அது மிகையல்ல. பஞ்சாபின் குர்தாஸ்பூர் மாவட்டத்தில் 4.7 கிலோமீட்டர் நீளமுள்ள நடைபாதையில் இருந்து இரண்டு கிலோமீட்டர் தொலைவில் உள்ள தேரா பாபா நானக் கிராமம் உள்ளது.
அன்றைய தினம், பஞ்சாப் மட்டுமின்றி ராஜஸ்தான் உள்ளிட்ட பல பகுதிகளிலிருந்து சீக்கியர்கள் குழுமியிருந்தனர். வயதானவர்கள், குழந்தைகள், பெண்கள் அங்கு கூடினார்கள். அவர்கள் வெகுதொலைவில் இருந்து குருநானக் வசித்த அந்த வீட்டை ஆவலுடன் எதிர்நோக்கினர். அப்போது பிரதமர் நரேந்திர மோடியின் பாதுகாப்பை முன்னிட்டு அங்கு பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டிருந்தது.
கண்களில் நீர் தளும்ப உணர்ச்சிப் பெருக்கில் அங்கு நின்றிருந்த சீக்கிய பக்தர்களிடம் ஈவிடி பாரத் செய்திகளுக்காக செய்தியாளர் ஸ்மிதா சர்மா பேசினார்.
பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த 80 வயதான குர்பச்சன் சிங் கூறும்போது, “நடைபாதை திறந்தது மகிழ்ச்சி. இந்த பயணம் கட்டணம் இல்லாமல் இருந்தால், நாங்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருப்போம். இந்த தொகையை ஏழை மக்கள் எவ்வாறு செலுத்துவார்கள்.? 1200 ரூபாய் ஒரு ஏழை மனிதனுக்கு நிறைய பணம்தான். எங்களைப் போன்றோருக்கு பேருந்து அல்லது ரயில் டிக்கெட் வாங்குவது கூட கடினம்தான்.
உணவுக்காக போராடும் மக்களும் உள்ளனர். நான் எனது ஆதார் அட்டையை கொண்டு வந்துள்ளேன். குருநானக் சாகிப்பை பார்க்க ஒரு வாரம் எடுத்தாலும் காத்திருந்து எனது மரியாதையை செலுத்த விரும்புகிறேன். ஒரு பணக்காரன் கட்டணத் தொகையை செலுத்தலாம். அவர் பாஸ்போர்ட்டை எடுக்கலாம். ஒரு ஏழை மனிதனுக்கு இது சாத்தியமில்லை” என்றார்.
இதையும் படிங்க: 'பாகிஸ்தான் குருத்வாராவை இந்தியர்கள் பார்க்க இனி பைனாகுலர் தேவைப்படாது' - பிரதமர் மோடி