கச்சா எண்ணெய் இதுவரை இல்லாத அளவு குறைந்து இருந்தாலும் நாட்டில் பெட்ரோல், டீசல் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பெட்ரோல், டீசல் விலையைக்கடந்த ஜூன் 7ஆம் தேதியிலிருந்து ஜூன் 29ஆம் தேதிக்குள், 22ஆவது முறையாக எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தியுள்ளன.
அதன்படி பெட்ரோல் லிட்டருக்கு 5 பைசாவும், டீசலுக்கு 13 பைசாவும் உயர்த்தப்பட்டுள்ளது. நேற்று முன் தினம்(ஜூன் 28) ஒரு நாள் மட்டும் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. இதன் மூலம் கடந்த 3 வாரங்களில் 22 முறை பெட்ரோல், டீசல் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதுவரை பெட்ரோல் லிட்டருக்கு ரூ.9.17 பைசாவும், டீசல் லிட்டருக்கு ரூ.11.14 பைசாவும் விலை அதிகரித்துள்ளது. பெட்ரோல், டீசல் விலை உயர்வு குறித்து பல்வேறு தரப்பினரும் மத்திய அரசை கடுமையாக விளாசுகின்றனர்.
அந்த வகையில், இது குறித்து முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறுகையில், "மே 25 முதல் பெட்ரோல், டீசல் விலையை 22 முறை உயர்த்தியது அரசாங்கத்தின் தவறான முடிவாகும். இவர்களது இந்த முடிவால், ஏழை எளிய மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி அதன் மூலம் லாபம் ஈட்டுவதை அரசாங்கம் நிறுத்த வேண்டும். பெட்ரோல், டீசல் விலை உயர்வை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்பதை நாங்கள் கேட்டுக் கொள்கிறோம். கரோனா வைரஸால் நாட்டில் வேலைவாய்ப்பின்மை அளவுக்கு அதிகமாக அதிகரித்துள்ளது.
இந்த கடினமான சூழலில் அனைத்துத் தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் குறிப்பாக விவசாயிகள், சிறு, குறு தொழிலாளர்கள், நடுத்தர வர்க்கத்தினர் ஆகியோரது வாழ்வாதாரம் தான் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு பொருளாதார ரீதியாக உதவ வேண்டும். ஆனால், இந்த அரசாங்கம் இதை செய்யாமல், பெருநிறுவனங்களுக்குக் கோடிக்கணக்கான கடன்களை தள்ளுபடி செய்துள்ளது" என்றார்.