கரோனா ஊரடங்கு காரணமாக இந்தியாவில் பல கோடி போர் வேலையிழந்துள்ளனர். இந்நிலையில் மோடி அரசுக்கு எதிராக காங்கிரஸ் கட்சி #SpeakUpForJobs என்ற பரப்புரையை தொடங்கியுள்ளது.
இந்நிலையில், முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் காணொலி ஒன்றை வெளியிட்டுள்ளார். அத்துடன், "மோடி அரசின் கொள்கைகள் கோடிக்கணக்கான வேலையிழப்பு, மொத்த உள்நாட்டு உற்பத்தியில் வரலாறு காணாத சரிவு ஆகியவற்றை ஏற்படுத்தியுள்ளன. இது இந்தியாவின் இளைஞர்களின் எதிர்காலத்தை சீரழித்துள்ளது" என்று பதிவிட்டுள்ளார்.
கோவிட்-19 தொற்றை தவறாகக் கையாண்டதால் ஏற்பட்டுள்ள பொருளாதார பாதிப்பு குறித்து விளக்கும் வகையில் ராகுல் காந்தி இந்தக் காணொலியை வெளியிட்டுள்ளார். மேலும் அதில், "நீங்கள்தான் (இளைஞர்கள்) நம் நாட்டின் எதிர்காலம், இப்போது நீங்கள் எதிர்காலத்தைக் காண்கிறீர்கள்.
கரோனா இந்தியாவை அடைவதற்கு முன்னரே, பிப்ரவரியில் இது குறித்து நான் எச்சரித்தேன், நாம் இதற்கு தயாராக வேண்டும் என்பதை வலியுறுத்தினேன். ஆனால் இந்த அரசு என்னைக் கேலி செய்தது.
அதன் பிறகும்கூட, ஏழை மக்களுக்கு நேரடியாக பணத்தை அளிக்க வேண்டும், நாட்டின் பொருளாதாரத்தின் முதுகெலும்பான சிறு, நடுத்தர தொழில்களைக் காப்பாற்றுவது, நமது நாட்டின் இளைஞர்களின் எதிர்காலமாக இருக்கும் இந்தியாவின் சில முக்கியத் தொழில்களை பாதுகாப்பது ஆகிய அரசு எடுக்க செயல்படுத்த வேண்டிய மூன்று முக்கிய நடவடிக்கைகள் குறித்தும் நான் பரிந்துரைத்தேன். ஆனால் மோடி அரசு இவற்றில் எதையும் செய்யவில்லை" எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், ராகுல் காந்தி மற்றொரு ட்வீட்டில், "மோடி தனது சில 'நண்பர்களுக்கு' மட்டும் உதவுகிறார். இன்று, நாட்டிலுள்ள இளைஞர்கள் வேலைவாய்ப்பு மற்றும் பிரகாசமான எதிர்காலத்தை கோருகின்றனர். ஆனால் பிரதமர் மோடி அமைதியாக இருக்கிறார். நாட்டில் இளைஞர்களின் பிரச்னைகள் புறக்கணிக்கப்படுகின்றன" என்று பதிவிட்டுள்ளார். பிரதமர் மோடியின் தவறான கொள்கைகள் இந்தியப் பொருளாதாரத்தையும், இந்த நாட்டின் இளைஞர்களின் எதிர்காலத்தையும் அழிப்பதாகவும் ராகுல் குற்றம் சாட்டியுள்ளார்.
இதையம் படிங்க: ரஃபேல் போர் விமானங்கள் இந்திய விமானப்படையில் இணைப்பு