உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ரா நதிக்கரையில் காதலின் சின்னமான தாஜ்மஹால் அமைந்துள்ளது. முற்றிலும் பளிங்கு கற்களால் கட்டப்பட்ட இது ஒரு கல்லறை.
முகமதிய மன்னனான ஷாஜகான் தனது ஆருயிர் மனைவி மும்தாஜ் பேகத்தின் பிரிவைப் தாங்க முடியாமல் இந்தக் கட்டடத்தை அவரின் சமாதி மீது எழுப்பினார் என்பது வரலாறு.
இதனைக் காண வெளிநாடுகளிலிருந்தும் சுற்றுலாப் பயணிகள் வருவார்கள். இந்த நிலையில் புதிய பார்வை தளம் ஒன்றை உத்தரப் பிரதேச அரசு திறந்துவைத்துள்ளது. இதன்மூலம், சுற்றுலாப் பயணிகள் நிலவொளியின் கீழ், அதிகாலை நேரங்களில் காதலின் சின்னமான தாஜ்மஹாலின் கண்கவர் காட்சியைக் காண உதவும்.
இதனை மாநில அமைச்சர் கிர்ராஜ் சிங் தர்மேஷ் இன்று திறந்துவைத்தார். இந்தப் பார்வை தளத்துக்கு, 'மெஹ்தாப் பாக் தாஜ்' என பெயரிடப்பட்டுள்ளது. இங்கிருந்து சுற்றுலாப் பயணிகள் தாஜ்மஹாலை ரூ.20 செலவில் காலையில் மூன்று மணி நேரமும் மாலை மூன்று மணி நேரமும் பார்க்கலாம். இந்த புதிய பார்வையாளர்கள் தளம் காலை 7 மணி முதல் 10 மணி வரையும் மாலை 7 மணி முதல் 10 மணி வரையிலும் திறக்கப்படும்.
இதுகுறித்து தர்மேஷ் கூறும்போது, “தாஜ் தளத்தை ஆக்ரா மேம்பாட்டு ஆணையம் உருவாக்கியுள்ளது. ஆக்ராவில் இதுபோன்ற அதிகமான தளங்கள் உருவாக்கப்பட வேண்டும் என்று விரும்புகிறேன். இதனால் அதிகமான வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இங்கு வர முடியும்” என்றார்.
இந்த புதிய பார்வையாளர்கள் தளத்திலிருந்து சுற்றுலாப் பயணிகள் தாஜ்மஹாலை பார்த்து ரசித்தனர். வெளிநாட்டு சுற்றுலாப் பயணி ஒருவர் கூறும்போது, “நான் ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரைச் சேர்ந்தவன். இதற்கு முன்பு தாஜ்மஹாலுக்குச் சென்றிருக்கிறேன். ஆனால் இந்த இடத்திற்கு அல்ல (மெஹ்தாப் பாக் தாஜ் வியூ பாயிண்ட்). இது ஒரு அருமையான இடம் என்று நான் நினைக்கிறேன்" என்றார்.
ஜம்மு-காஷ்மீரைச் சேர்ந்த மற்றொரு சுற்றுலாப் பயணி, "இது சுற்றுலாவுக்கு ஒரு நல்ல விஷயம். இரவில் தாஜ்மஹாலைப் பார்க்க வந்தால் அது ஒரு கனவு நனவான தருணமாக இருக்கும்" என்றார்.
இந்த மாத தொடக்கத்தில், ஆக்ரா மாவட்ட நிர்வாகம் இப்பகுதியில் காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்த முகலாய கால நினைவுச்சின்ன தாஜ்மஹாலின் வாயில்களில் இரண்டு காற்று சுத்திகரிப்பு இயந்திரங்களை நிறுவியிருந்தது நினைவுகூரத்தக்கது.
இதையும் படிங்க: தாஜ்மஹாலில் தாய்ப்பால் புகட்ட தனியறை!