புதுச்சேரி மாநில சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் இன்று துணைநிலை ஆளுநர் கிரண்பேடி பங்கேற்று உரை நிகழ்த்தினார். அதில், “ 2019-20 ஆம் ஆண்டின் மொத்த ஒதுக்கீடான 8,525 கோடியில் 7,927 கோடி, அதாவது 93% செலவு செய்யப்பட்டுள்ளது. 2020க்கு முன்னதாக வரவேண்டிய ஜிஎஸ்டி இழப்பீட்டு தொகை சுமார் 360 கோடி, உரிய நேரத்தில் வராமல் போனதே செலவினம் குறைந்ததற்கு காரணமாகும்.
அரசு பள்ளி மாணவர்களுக்கு அட்சய பாத்திரம் எனும் மதிய உணவு திட்டம் இந்த கல்வியாண்டு முதல் செயல்படுத்தப்படும். கரானா நேரத்திலும் முதலமைச்சர், அமைச்சர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள், மருத்துவத்துறையினர் உள்ளிட்டோர் அயராமல் சிறப்பான முறையில் பாடுபட்டு வருகின்றனர். யூனியன் பிரதேசங்கள் மத்தியில் சுகாதாரத்துறையில் புதுச்சேரி முதன்மை இடத்தில் இருப்பது மிகுந்த பாராட்டுக்குறியது.
புதுச்சேரி தொடர்வண்டி நிலையத்திற்கு வைஃபை வசதி அளிக்கப்படவுள்ளது பயணிகளுக்கு நல்ல பயனை தரும். இணைய தள குற்றங்களில் இருந்து குழந்தைகள் மற்றும் பெண்களை பாதுகாத்தல் எனும் திட்டத்தின் கீழ், புதுச்சேரியில் இணையதள தடயவியல் ஆய்வக பயிற்சி மையம், சுமார் 4 கோடியே 54 லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்படுகிறது “ என்று தெரிவித்தார்.
முன்னதாக, துணைநிலை ஆளுநர் கிரண்பேடி பேரவைக்குள் வந்தவுடன், சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் அரசு கொறடா அனந்தராமன், காங்கிரஸ் உறுப்பினர்கள் லட்சுமி நாராயணன், ஜெயமூர்த்தி ஆகியோர், அவரது உரையை புறக்கணித்து வெளியேறினர்.
பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர் ஜெயமூர்த்தி, புதுச்சேரி மாநில சட்டப்பேரவை உறுப்பினர்களை மனநலம் பாதித்தவர்கள் என்று கிரண் பேடி பேசியதைக் கண்டித்து, கருப்பு சட்டை அணிந்து வந்ததுடன், அவரது உரையை புறக்கணித்து அவையில் இருந்து வெளியேறியதாக கூறினார். ஆளுநர் உரையை மூத்த அமைச்சர் நமச்சிவாயமும் புறக்கணித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: எம்ஜிஆர் சிலை அவமதிப்பு - அதிமுகவினர் போராட்டம்