புதுச்சேரி மாநிலத்தில் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு 23 ஆயிரம் குடும்பங்கள் மீன்பிடித் தடைக்கால உதவி பெற்றுவந்தனர். இந்நிலையில், அரசு ஊழியர்கள் உள்ளிட்ட தகுதியற்றவர்களை நீக்கம்செய்து கடந்தாண்டு 19,000 மீனவர் குடும்பத்திற்கு மட்டும், தலா 5,500 ரூபாய் மீன்பிடித் தடைக்கால நிவாரண உதவியை அரசு வழங்கியது.
தற்போது மீன்பிடித் தடைக்காலம் நிறைவடைந்த நிலையில், மீனவர்களில் முதியோர் உதவித்தொகை பெறுபவர்களுக்கு மீன்பிடித் தடைக்கால நிவாரண உதவி வழங்கப்படாது என்ற புதிய விதிமுறையை அரசு அறிவித்துள்ளது. ஓய்வூதியம் பெறும் பிற சமுதாயத்தினர் அரசின் பல்வேறு நலத் திட்டங்களில் உதவி பெற்றுவரும் நிலையில், மீனவர்களுக்கு மட்டும் நிவாரணம் வழங்கப்படாதது கண்டிக்கத்தக்கது எனக் கூறி அதிமுகவினர் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர் அன்பழகன் தலைமையில், திப்ராயபேட் மீனவ கிராமப் பகுதி மக்கள் ஏராளமானோர் இன்று காலை, ஆளுநர் மாளிகையை முற்றுகையிடுவதற்காக ஊர்வலமாக வந்தனர்.
அவர்களைப் பழைய ஆர்டிஓ அலுவலகம் முன்பு காவல் துறையினர் தடுத்து நிறுத்தினர். இதையடுத்து அங்கு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அவர்கள், மீனவர்களுக்கு எதிராகச் செயல்படுவதாக காங்கிரஸ் அரசு, துணைநிலை ஆளுநருக்கு எதிராக முழக்கமிட்டனர்.
இதையும் படிங்க: பாஜகவிற்கு எதிராகத் தேர்தல் ஆணையத்தை அணுகும் காங்கிரஸ்!