டாக்டர் ருத் காத்தரினா மார்தா ஃபெள 1929ஆம் ஆண்டு செப்டம்பர் 9ஆம் நாள் ஜெர்மனியின் லெப்சிக் நகரில் பிறந்தவர். 'மனித சமூகம் அத்தகைய நிலையில் வாழ முடியும் என்று என்னால் நம்ப முடியவில்லை' என்று பாகிஸ்தானில் உள்ள தொழுநோயாளிகளின் காலனி பகுதியில் கண்ட காட்சிக்கு பின் அவர் கூறிய இந்தக் கருத்து மிகவும் பேசப்பட்டது.
டாக்டர் ருத் தனது 29ஆவது வயதில் ஒரு தொழுநோயாளியை சந்தித்த பிறகே அவர் தன்னை கன்னியாஸ்திரியாக மாற்றிக்கொள்ளும் முடிவை எடுத்தார். அவ்வாறு பாகிஸ்தானின் கராச்சி நகரில் உள்ள மேரி அடிலெய்ட் தொழுநோய் மருத்துவமனைக்குச் சென்று தனது வாழ்க்கையை மாற்றி அமைத்துக் கொண்டார்.
அந்த மருத்துவமனையில் தொழுநோயால் பாதிக்கப்பட்டு அவதியுற்றுவந்த ஒருவரின் மீது டாக்டர் ருத்தின் கவனம் திரும்பியது. இந்த நோயால் பாதிக்கப்பட்ட எண்ணிலடங்காதவர்களுக்கு உதவிக்கரம் நீட்ட நினைத்த ருத், 1965 ஆம் ஆண்டில் நாட்டின் முதல் தொழுநோய் தொழில்நுட்ப வல்லுநர்களின் படிப்பையும் தொடங்கினார். அவரது கடின உழைப்பு பாகிஸ்தானில் தொழுநோயைக் கட்டுப்படுத்தி நோயற்ற சமூகமாக மாற்றும் முயற்சிக்கு வித்திட்டது.
டாக்டர் ருத்தின் தீவிர முயற்சியின் பலனாக ஆசியாவில் பெருமளவில் தாக்கத்தை ஏற்படுத்தியிருந்த இந்தக் கொடிய நோய் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாக உலக சுகாதார அமைப்பு அறிவித்திருந்தது. இதையடுத்து அவரது சமூக சேவையைப் பாராட்டி தேசிய மற்றும் சர்வதேச அளவில் கவனத்தை பெற்று தொழுநோயை எதிர்த்துப் போராடி வெற்றிகண்டவர் என்ற பெருமையைப் பெற்றார். இவருக்கு முந்தைய காலகட்டத்தில் வாழ்ந்த அன்னை தெரெசாவுடன் இவரை ஒப்பிட்டு பாகிஸ்தானின் அன்னை தெரெசா என்ற போற்றுதலுக்கு உரியவரானார்.
தொழுநோயை எதிர்த்துப் போராடி துயரத்தில் வாடிய மக்களுக்காக தனது வாழ்க்கையையே அர்ப்பணித்த டாக்டர் ருத்தின் பெருமையை நினைவுகூரும் வகையில் அவரது பிறந்த நாளான இன்று அவரை கௌரவிக்கும் வகையில் கூகுள் டூடுல் வெளியிட்டுள்ளது.