கேரள மாநிலம் திருவனந்தபுரத்திலுள்ள ஐக்கிய அரபு அமீரக தூதரகத்திற்கு கடந்த ஜூலை 5ஆம் தேதி பார்சல் ஒன்று வந்தது. அந்தப் பார்சலை சோதனையிட்ட சுங்கத் துறையினர், அதிலிருந்த 30 கிலோ தங்கத்தைப் பறிமுதல் செய்தனர்.
இந்தத் தங்கக் கடத்தல் வழக்கை தற்போது தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) விசாரித்துவருகிறது. இந்த வழக்கு தொடர்பாக ஐக்கிய அமீரக தூதரகத்தில் பணிபுரிந்த முன்னாள் அலுவலர் சரித், ஸ்வப்னா சுரேஷ், சந்தீப் நாயர் உள்ளிட்டோரை என்ஐஏ அலுவலர்கள் கைதுசெய்தனர். அதேபோல இதில் மூன்றாவது குற்றவாளியான பைசல் ஃபரீத்துக்கும் ப்ளூ கார்னர் நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து நீதிமன்றத்தில் என்ஐஏ சமர்ப்பித்த அறிக்கையில், திருவனந்தபுரத்திலுள்ள பெடரல் வங்கியின் கிளையில் ஸ்வப்னாவின் லாக்கரிலிருந்து 36.5 லட்சம் ரூபாயும், எஸ்பிஐ வங்கியிலுள்ள லாக்கரிலிருந்து 64 லட்சம் ரூபாய் மற்றும் 982.5 கிராம் தங்க ஆபரணங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது பறிமுதல் செய்யப்பட்டுள்ள தங்கம் ஸ்வப்னாவின் திருமணத்தின்போது துபாயைச் சேர்ந்த ஷேக் ஒருவரால் அன்பளிப்பாகக் கொடுக்கப்பட்டதாக ஸ்வப்னா சார்பில் ஆஜரான வழக்கறிஞர் தெரிவித்தார். மேலும், தற்போது எர்ணாகுளத்திலுள்ள மாவட்டச் சிறையிலுள்ள ஸ்வப்னா, தனது குழந்தைகளைச் சந்தித்துப் பேச அனுமதி கோரியிருந்தார். அதற்கான அனுதியையும் நீதிமன்றம் தற்போது அளித்துள்ளது.
ஸ்வப்னா சுரேஷ், சந்தீப் நாயர் உள்ளிட்டோரை விசாரிக்க வழங்கப்பட்ட என்ஐஏ காவல் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, அவர்களுக்கு ஆகஸ்ட் 21ஆம் தேதி வரை நீதிமன்றக் காவல் வழங்கப்பட்டுள்ளது.
மேலும், ஜாமின் கோரி இருவரும் தாக்கல் செய்துள்ள மனுவை அடுத்த வாரம் பரிசீலிப்பதாகக் கூறிய நீதிபதிகள், வழக்கின் விசாரணையைப் புதன்கிழமைக்கு ஒத்திவைத்ததனர்.
இதையும் படிங்க: தங்கக் கடத்தல் வழக்கு -முதலமைச்சரின் முன்னாள் முதன்மைச் செயலருக்கு நோட்டீஸ்