கர்நாடக மாநிலத்தில் இயங்கிவரும் ஸ்ரீ குரு ராகவேந்திர கூட்டுறவு வங்கியின் தலைமை நிர்வாக அலுவலராக வாசுதேவ மாயா பணியாற்றினார். இவர், தலைமை அலுவலராக பணியாற்றிவந்தபோது ஸ்ரீ குரு ராகவேந்திர கூட்டுறவு வங்கியில் பல கோடி ரூபாய் நிதி மோசடிகள் நடந்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டது.
இதனைடுத்து, ஜூன் 18ஆம் தேதியன்று பெங்களூருவில் உள்ள அவருக்குச் சொந்தமான பல்வேறு இடங்களில் ஊழல் தடுப்பு பணியகம் (ஏசிபி) சோதனை நடத்தியது. இவர் கடந்த இருநாள்களாக எங்கிருந்தார் என தெரியாத நிலையில், பெங்களூருவில் அவரது கார் நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதாக காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது.
பெங்களூரு நெடுஞ்சாலையோரம் நின்றிருந்த காரை காவல்துறையின் ரோந்து வாகனம் சோதித்தபோது, இந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தது என்று காவல்துறை வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன. வங்கி நிதி முறைகேடு மோசடி குற்றச்சாட்டுக்கு ஆளானதால் வாசுதேவ மாயா, தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர்.
இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர். முன்னாள் தலைமை நிர்வாக அலுவலர் வாசுதேவ மாயா உயிரிழந்த நிலையில் கண்டறியப்பட்டது அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.