2014ஆம் ஆண்டைத் தொடர்ந்து 2019ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் பாஜக வெற்றிப் பெற்றதைத் தொடர்ந்து மோடி இரண்டாவது முறையாக பிரதமராக பதவியேற்றுக் கொண்டார். ஓராண்டு நிறைவு பெற்றதைத் தொடர்ந்து முதன்முதலாக அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இதில், பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. மத்திய அமைச்சர்கள் பிரகாஷ் ஜவடேகர், நிதின் கட்கரி, நரேந்திர சிங் தோமர் ஆகியோர், கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து செய்தியாளர்களிடம் விவரித்தனர்.
சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு 20,000 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் ஜவடேகர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து மேலும் அவர் கூறுகையில், "நடுத்தர தொழில் நிறுவனங்களில் முதலீடு செய்வதற்கான வரம்பு 50 கோடி ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. விற்று முதல் எனப்படும் டர்ன் ஓவரின் வரம்பு 250 கோடி ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் அமைப்பதற்காக 50,000 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நிதியானது சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களில் தனியாரின் முதலீடு அதிகரிக்க ஊக்குவிக்கும்" என்றார்.
விவசாயிகள் கடன் செலுத்துவதற்கான கால அவகாசம் ஆகஸ்ட் மாதம்வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என விவசாய நலத்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், "விவசாயிகளின் நலன் கருதி 14 காரிஃப் பயிர்களின் குறைந்தபட்ச ஆதார விலை 50 விழுக்காட்டிலிருந்து 83 விழுக்காடாக உயர்த்தப்பட்டுள்ளது. கடன் செலுத்துவதற்கான கால அவகாசம் ஆகஸ்ட் மாதம்வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
நெல்லின் குறைந்தபட்ச ஆதார விலை குவிண்டாலுக்கு 1,868 ரூபாயாக உள்ளது. ராகி, அவரை விதை, கடலை, சோயா பீன்ஸ், பருத்தி ஆகியவற்றின் குறைந்தபட்ச ஆதார விலை 50 விழுக்காடு உயர்த்தப்பட்டுள்ளது" என்றார்.
இதையும் படிங்க: ராஜஸ்தான் சாலை விபத்தில் 5 பேர் உயிரிழப்பு!