விலை உறுதியளிப்பு மற்றும் பண்ணை ஒப்பந்தத்திற்கான விவசாயிகள் (அதிகாரம் மற்றும் பாதுகாப்பு) சட்டம், விவசாயிகள் விளைபொருள்கள் வணிகம் மற்றும் வர்த்தகம் (ஊக்குவித்தல் மற்றும் உதவுதல்) சட்டம், அத்தியாவசியப் பொருள்கள் திருத்தச் சட்டம் ஆகிய மூன்று சட்டங்களை மத்திய அரசு நிறைவேற்றியது.
இந்தச் சட்டத்திற்கு திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. விவசாயிகளை வஞ்சிக்கும் சட்டம் என்றும் கார்ப்பரேட் முதலாளிகளுக்கு ஆதரவாக உள்ளதாகவும் எதிர்க்கட்சிகள் விமர்சித்துவருகின்றன. குறிப்பாக ஹரியானா, பஞ்சாப், உ.பி. உள்ளிட்ட மாநிலங்களில் வேளாண் சட்டத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து தொடர் போராட்டங்கள் நடத்திவருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக, ஹரியானா சிர்சாவில் வேளாண் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஸ்வராஜ் இந்தியா கட்சி தலைவர் யோகேந்திர யாதவ், நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதையடுத்து, யோகேந்திர யாதவ், ஹரியானா கிசான் மஞ் தலைவர் பிரகலாத் சிங் உள்ளிட்டோரை காவல்துறையினர் கைது செய்தனர். இதுகுறித்து சிர்சா காவல் துணைக் கண்காணிப்பாளர் குல்திப் சிங் கூறுகையில், "அனுமதி தராத இடத்தில் போராட்டத்தை நடத்தியதன் காரணமாக அவர்களை கைது செய்துள்ளோம். சாலையில் போராட்டத்தை நடத்தியதால் பயணம் செய்பவர்களுக்கு இடையூறாக இருந்தது. போராட்டத்தை நடத்த மைதானத்தில் அனுமதி அளித்தோம். ஆனால், அவர்கள் ஒத்துக்கொள்ளவில்லை. எனவேதான் அவர்களை கைது செய்தோம்" என்றார்.
இதுகுறித்து யோகேந்திர யாதவ் தனது ட்விட்டர் பக்கத்தில், "சிர்சாவில் அறவழி போராட்டத்தில் கலந்துகொண்ட காரணத்தால் நான் கைது செய்யப்பட்டுள்ளேன். போராட்டக் களத்தை காவல்துறை அடித்து நொறுக்கி உள்ளது. நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் கைது செய்துள்ளது. விவசாயிகளின் கேள்விகளால் ஹரியானா அரசு திக்குமுக்காடி உள்ளது. மாற்றுக் கருத்தை நசுக்க காவல் படையை பயன்படுத்தியுள்ளது" என பதிவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: தலைமைப் பொருளாதார ஆலோசகரை கேலி செய்த ப.சிதம்பரம்