பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் வங்கதேசம் உள்ளிட்ட நாடுகளில் இருந்து சட்டவிரோதமாக இந்தியாவில் குடியேறிய சிறுபான்மையினருக்கு எளிதில் குடியுரிமை கிடைக்க வழிவகை செய்யும் தேசிய குடியுரிமை மசோதாவுக்கு நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் உறுப்பினர்களின் ஆதரவு கிடைத்துள்ளது.
இந்த மசோதாவுக்கு மகாராஷ்டிராவின் முன்னாள் முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் பாராட்டு தெரிவித்துள்ளார். அதேநேரத்தில் பதவிக்காக சிவசேனா தனது கொள்கையில் சமரசம் செய்துக் கொண்டுள்ளது எனவும் அவர் கூறினார்.
இதுகுறித்து பட்னாவிஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், “பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் வங்கதேசம் உள்ளிட்ட நாடுகளிலிருந்து வந்த முஸ்லிம் அல்லாத அகதிகளுக்கு இந்திய குடியுரிமை வழங்கும் மசோதா நாடாளுமன்றத்தின் மேலவையில் (ராஜ்ய சபா) வெற்றி பெற்றுள்ளது. பிரதமர் நரேந்திர மோடிக்கும், உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கும் எனது பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன். இது ஒரு மிகப்பெரிய மனிதாபிமான நடவடிக்கை. ராஜ்ய சபா உறுப்பினர்களுக்கும் என் நன்றிகள்.
சிவசேனா பதவி மயக்கத்தில் உள்ளது. பதவிக்காக பால்தாக்கரேவின் கொள்கைகளை அவர்கள் தியாகம் செய்ய துணிந்து விட்டனர்” என கூறியுள்ளார். குடியுரிமை மசோதாவுக்கு ஆதரவான நிலைப்பாட்டை மக்களவையில் சிவசேனா எடுத்தது.
இருப்பினும் மாநிலங்களவையில் நடந்த வாக்கெடுக்புக்கு முன்னதாக சிவசேனா வெளிநடப்பு செய்து விட்டது. குடியுரிமை திருத்த மசோதாவுக்கு ஆதரவாக மாநிலங்களவையில் 125 வாக்குகளும், எதிராக 99 வாக்குகளும் கிடைத்தது.
இதையும் படிங்க: வெங்காயம் விலை அதிகரிப்பு: பாஜக மகளிரணிக்கு சிவசேனா கேள்வி!