பாட்னா: பிகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் யாதவை அம்மாநில முன்னாள் காவல்துறைத் தலைவர் குப்தேஷ்வர் பாண்டே மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்துள்ளார்.
இந்தி நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் ஐயத்திற்குரிய மரணம் தொடர்பான வழக்கில் முக்கியப் பங்காற்றிய பிகார் டிஜிபி குப்தேஷ்வர் பாண்டே அண்மையில் விருப்ப ஓய்வு பெற்றார். ஓய்வுப் பெறுவதற்கு மேலும் ஐந்து மாத காலம் இருந்த நிலையில், அவரது இந்த திடீர் முடிவை ஏற்ற பிகார் ஆளுநர் பாகு சவுகான், கடந்த 23ஆம் தேதி அதற்கான தனது ஒப்புதலை அளித்தார்.
டிஜிபி பதவியில் இருந்து விலகிய பாண்டே, என்.டி.ஏ கூட்டணி சார்பில் தேர்தலில் போட்டியிட உள்ளதாக பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. பிகார் மாநிலத் தேர்தல் அக்டோபர் 28ஆம் தேதி தொடங்கி மூன்று கட்டங்களாக நடைபெறவுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்நிலையில், பிகார் மாநில முதலமைச்சரும், ஐக்கிய ஜனதா தளம் கட்சி தலைவருமான நிதிஷ் குமார் யாதவை, குப்தேஷ்வர் பாண்டே மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்துப் பேசினார்.
ஐக்கிய ஜனதா தளம் (ஜே.டி.யு) கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பு ஏறத்தாழ 3 மணி நேரம் நீடித்ததாக அறியமுடிகிறது. பாண்டேவின் பூர்வீக மாவட்டமான பக்ஸரில் உள்ள ஷாப்பூர் சட்டப்பேரவைத் தொகுதியில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வேட்பாளராக போட்டியிடலாம் அல்லது வால்மிகிநகர் மக்களவை இடைத்தேர்தலுக்கான ஜே.டி.யு. வேட்பாளராக களமிறங்கப்படலாம் என எதிர்ப்பார்க்கப்படுவதாக அரசியல் வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.
சுஷாந்த் சிங் ராஜ்புத் மரண வழக்கில் பாண்டே மீது மகாராஷ்டிரா அரசு கூறிய குற்றச்சாட்டுகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. முன்னாள் டிஜிபி பாண்டே, அரசியல் காரணங்களுக்காக பிகார் அரசை பாதுகாக்க பணியாற்றி வருகிறார் என மகாராஷ்டிரா அரசு விமர்சித்தது குறிப்பிடத்தக்கது.